பல் பிடுங்கிய விவகாரம்; பல்வீர் சிங் மீது பதிவான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை

பல் பிடுங்கிய விவகாரம்; பல்வீர் சிங் மீது பதிவான குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை

ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் மீது அம்பாசமுத்திரம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பதியப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு அம்பாசமுத்திரம் ஏஎஸ்பியாக பணிபுரிந்த பல்வீர் சிங் ஐபிஎஸ், விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரம் அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி இருக்கும் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், " அம்பாசமுத்திரம், அம்பாசமுத்திரம் அனைத்து பெண்கள் காவல் நிலையம், விகேபுரம், கல்லிடைக்குறிச்சி, பாப்பாக்குடி, மணிமுத்தாறு ஆகிய பகுதிகளில் நான் சிறப்பாக பணியாற்றி இருக்கிறேன். இதற்காக தமிழக காவல்துறை தலைவரிடம் பாராட்டு சான்றிதழையும் பெற்று இருக்கிறேன். எனது பணிக்காலத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்துவதை தடுத்திருக்கிறேன். என்னை இந்த பொறுப்பில் இருந்து அகற்றும் நோக்கில், பொய்யான பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத காவலில் வைத்து அருண் குமார் என்பவரது பல்லை உடைத்ததாக கூறப்படும் வழக்கும் அவ்வாறு பதியப்பட்டதே. இவ்வாறாக என் மீது பதியப்பட்ட 4 வழக்குகளில் கீழமை நீதிமன்றத்தில், சிபிசிஐடி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததன் அடிப்படையில் என் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே அந்த குற்றச்சாட்டுகளை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், '' மனுதாரர், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை திறம்பட கையாண்டார். ரவுடியிசத்தை ஒழித்துள்ளார். இவரை பழி வாங்கும் நோக்கில், சட்டவிரோத கும்பலில் இருந்து அவர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஊடக மற்றும் பிற அழுத்தங்களின் காரணமாக, ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனுதாரர் புதிதாக சேர்ந்துள்ள ஐபிஎஸ் அதிகாரி. அவருக்கு தமிழ் மொழி முழுமையாக தெரியாது. மேலும், தாக்கல் செய்யப்பட்ட குற்ற பத்திரிக்கையை, நெல்லை மாவட்ட நீதிபதி இடர்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாக குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளார்.''என கூறினார்.

இதைத் தொடர்ந்து, அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில்,'' குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிகாரி, விசாரணை கைதிகளை காவல் நிலைய துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். அரசு நடத்திய தமிழ் மொழி தேர்விலும் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் மொழியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது ஏன்? என வழக்கு விசாரணையின் போது அவர் தரப்பில் கேள்வி எழுப்பவில்லை.எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்கக் கூடாது.'' என வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து, இடையீட்டு மனு தாக்கல் செய்த பாதிக்கப்பட்ட நபர் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில், '' ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் காவல் நிலைய துன்புறுத்தலை மேற்கொண்டுள்ளார். ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தான் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் சார்பில் தன்னையும் மனுதாரராக சேர்க்க வேண்டும்.'' என வாதிட்டார்.

இதனை தொடர்ந்து நீதிபதி, '' தமிழ் மொழியில் விசாரணை நடத்தப்பட்டு, தமிழ் மொழியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகள் ஆகியுள்ள ஒரு ஐபிஎஸ் அதிகாரி, தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வாய்ப்பில்லை. 'சாப்பிட்டீங்களா?, உட்காருங்க' என்று தமிழ் வார்த்தைகளை பேசினால், அவர் தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்று கூற முடியுமா? எனக்கும் அதே நிலை தான்.

மேலும், இவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதற்கு தேவையான ஆவணங்களோ, சான்றுகளோ இல்லை. மாவட்ட நீதிமன்றம், நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொள்ளாமல், இயந்திரத்தனமாக ஐபிஎஸ் அதிகாரி மீது குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர். ஊடக அழுத்தம் மற்றும் பிற அழுத்தங்களால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, நெல்லை மாவட்ட நீதிமன்றம் பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்படுகிறது. மேலும் இதன் அடிப்படையில், நீதிமன்றத்தில் எந்த விதமான விசாரணை நடத்துவதற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.'' என உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை ஜனவரி 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.