காதலியுடன் தாஜ்மஹாலை ரசித்த ட்ரம்ப் மகன்

காதலியுடன் தாஜ்மஹாலை ரசித்த ட்ரம்ப் மகன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை தனது காதலியுடன் நேரில் கண்டு ரசித்தார்.

இந்தியாவின் அடையாளங்களுள் ஒன்றான தாஜ்மஹாலை எப்படியேனும் கண்டு ரசித்து விட வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும். திருமணமான தம்பதி, காதல் ஜோடிகள் என பலரும் தாஜ்மஹால் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று விருப்பப்படுவார்கள். அந்த வகையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் தாஜ்மஹாலுக்கு வருகை தந்து அதன் அழகை ரசித்து செல்வார்கள்.

மேலும், 1983 ஆம் ஆண்டு முதல் யுனேஸ்கோவின் உலக பாரம்பரிய தலமாகவும், உலகின் ஏழு புதிய அதிசயங்களில் ஒன்றாகவும் தாஜ்மஹால் இருந்து வருகிறது. இதனிடையே, பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்தியாவிற்கு அரசு முறை பயணமாக வரும் போது, பெரும்பாலும் தாஜ்மஹாலுக்கு சென்று அதன் அழகை கண்டு ரசிப்பார்கள். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்க, அமெரிக்க அதிபரின் மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியர் இந்தியா வந்துள்ளார்.

மேலும், அவர் தனது காதலியுடன் தாஜ்மஹாலுக்கு இன்று வருகை தந்தார். இதற்காக உ.பி மாநிலம் கெரியா விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் அவர் ஆக்ரா வந்தடைந்தார். அவரின் வருகையை முன்னிட்டு தாஜ்மஹாலை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் என தாஜ்மஹால் மூன்றடுக்கு பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. மேலும், ஜூனியர் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக செல்போன் சிக்னல்கள் காண்காணிக்கப்பட்டன.

தொடர்ந்து தனது காதலி மற்றும் நண்பருடன் தாஜ்மஹால் வந்த ஜூனியர் ட்ரம்ப் அதன் அழகை கண்டு ரசித்தார். மேலும், அங்கு மிகவும் பிரபலமான டயானா இருக்கையில் அமர்ந்து ஜூனியர் ட்ரம்ப் தனது காதலியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், தாஜ்மஹால் தொடர்பான தனது சந்தேகங்களை அங்குள்ள மூத்த வழிகாட்டியான நிதின் சிங்கிடம் கேட்டு அறிந்து கொண்டார்.

மேலும், தாஜ்மஹால் பற்றி தனது தந்தை தன்னிடம் கூறியதை விட, புகைப்படங்களில் பார்த்து தெரிந்துகொண்டதை விட மிக அழகாக இருப்பதாக ஜூனியர் ட்ரம்ப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், தனது குழந்தைகளுடன் மீண்டும் ஒருமுறை இங்கு வர விருப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிப்ரவரி 24, 2020 அன்று தனது மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப் மற்றும் மருமகன் ஜெரெட் குஷ்னர் ஆகியோருடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்த்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து தாஜ்மஹால் வரை சுமார் 14 கி.மீ. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தாஜ்மஹாலை பார்வையிட்ட 126 சிறப்பு விருந்தினர்கள்

டெல்லியில் நடைபெறும் சர்வதேச தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பங்கேற்க பல்வேறு நாடுகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் இந்தியா வந்துள்ளனர். அவர்கள் உட்பட 126 பேர் தாஜ்மஹாலை இன்று சுற்றிப் பார்த்தனர். இதில், பல நாடுகளை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் தலைமை நீதிபதிகளும் அடங்குவர். அவர்கள் அனைவரும் தாஜ்மஹாலின் கட்டடக் கலையை கண்டு பிரமித்து போயினர்.