சிறுமி வன்கொடுமை வழக்கு: தஷ்வந்த் மரண தண்டனையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

சென்னையில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சென்னை போரூரை அடுத்த மதனந்தபுரத்தைச் சேர்ந்தவர்கள் பாபு - ஸ்ரீதேவி தம்பதி. கடந்த 2017 ஆம் ஆண்டு இத்தம்பதியின் 7 வயது மகள் திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த சேகர் - சரளா தம்பதியின் மகன் தஷ்வந்த் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்ததை கண்டுபிடித்தனர்.
இதனையடுத்து தஷ்வந்த் கைது செய்யப்பட்டு இந்த வழக்கானது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பானது கடந்த பிப்ரவரி மாதம் வழங்கப்பட்டது. அதில், தஷ்வந்துக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும், மரண தண்டனையும் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து, தஷ்வந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அங்கும் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனிடையே, சிறுமி கொலை வழக்கின் போது ஜாமினில் வந்த தஷ்வந்த் தனது தாயையும் கொலை செய்ததாக வழக்குத் தொடரப்பட்டது. ஆனால் தஷ்வந்தின் தந்தை அந்த வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அந்த வழக்கிலிருந்து தஷ்வந்தை செங்கல்பட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில், சிறுமி வழக்கில் மட்டும் தண்டனை உறுதி செய்யப்பட்ட தஷ்வந்த், கடந்த பிப்ரவரி மாதம் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதன் விசாரணையானது உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததோடு, அவரை விடுதலை செய்யவும் உத்தரவிட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில், தஷ்வந்தின் வழக்கில் குற்றத்தை நிரூபிக்க தவறிவிட்டதாகவும், ஆதாரங்களாக சமர்பிக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகள் போதுமானவை அல்ல என்றும் கூறியுள்ளது. மேலும், டிஎன்ஏ பரிசோதனை ஒத்து போகவில்லை என்பதாலும் தஷ்வந்தை விடுதலை செய்வதாக கூறி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.