வடகிழக்கு பருவமழைக்கு ‘பை-பை’ - 3 நாட்களில் விலகுவதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிகத்தீவிரமாக இருந்தது. தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது.
வேளாங்கண்ணி 13, திருப்பூண்டி, திருக்குவளை தலா 10, செம்பனார்கோயில், வேதாரண்யம், சீர்காழி, காரைக்கால், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தலா 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது.
ஏனைய தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2-5° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.
தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை நாளை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 15 ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். ஜனவரி 16 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டுக்கு அதிக மழை பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்வது வழக்கம். ஆனால், நடப்பாண்டில் அக்டோபர் 16-ஆம் தேதி தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது,” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 50 செ.மீ. அதிகம் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் இந்திய பகுதியில் இருந்து விலக்குவதற்கான வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.