அதிமுக கூட்டணியில் மேலும் 2 கட்சிகள் சேர்ந்தன
அமமுகவை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியை தமாகா மற்றும் புதிய நீதி கட்சி உறுதிப்படுத்தியுள்ளன.
தமிழ்நாட்டில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரச்சாரம் மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இதனால், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
அந்த வகையில், அதிமுக தலைமையிலான பாஜகவும் கூட்டணி உள்ளிட்டவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நேற்று தமிழ்நாடு வந்தார். அந்த வகையில், நேற்று அமமுக கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது.
இன்றைய தினம் மேலும் சில கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் புதிய நீதிக் கட்சி ஆகியவை அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பதை உறுதி செய்தன.
இதற்காக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இருவரும் இதனை தெரிவித்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “ஜி.கே.வாசனை கடந்த 20 ஆண்டுகளாக தெரியும். தமிழக மக்களுக்காக நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் அவர் செய்த பணிகள் அளப்பரியது. ஏ.சி.சண்முகம், நம்பிக்கைக்குரிய கூட்டணி தலைவர். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாகி வருகிறது. மத்தியில் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சியை அமைக்கும். தமிழ்நாட்டில் நிலவும் குடும்ப மற்றும் ஊழல் ஆட்சி அப்புறப்படுத்தப்படும். தமிழ்நாட்டில் ஆன்ட்டி நேஷனல் பாலிடிக்ஸ் செய்து வரும் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினை வரும் தேர்தலில் மக்கள் தூக்கி எறிவார்கள்” எனத் தெரிவித்தார்.
அதையடுத்து பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், “தே.ஜ கூட்டணி தமிழகத்தின் வெற்றிக் கூட்டணி. தற்போது, மக்கள் விரோத திமுகவை அகற்றக்கூடிய, நம்பிக்கையை பெற்ற பலமான கூட்டணியாக உருவாகியுள்ளது. ‘ஒன்றுபடுவோம் செயல்படுவோம் வெற்றி பெறுவோம்’ என்ற அடிப்படையில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்று கூட்டணி கட்சித் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். வரும் தேர்தலில் தமாகா தனி சின்னத்திலேயே போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் தமாகா போட்டியிடும் என்பது கூட்டணி 100 சதவீதம் முடிவான பிறகு முறையாக அறிவிக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து பேசிய புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், “புதிய நீதி கட்சி கடந்த 25 ஆண்டுகளாக வாஜ்பாய் காலத்திலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து அங்கம் வகித்து வருகிறது. புதிய நீதி கட்சியை பொறுத்த வரை, வரும் தேர்தலில் மிகப் பெரிய சக்தியாக பணியாற்றுவோம். மத்தியில் பிரதமர் இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றி வருகிறார். ஆகையால், மாநில அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், தமிழ்நாடு வளர முடியும். எங்கு பார்த்தாலும் போதை, கற்பழிப்புகள். இவை மாற்றப்பட வேண்டும்” என தெரிவித்தார்.