தாமிரபரணி இனிமேல் விவசாயம், குடிநீருக்கு மட்டும் தான் - தூத்துக்குடியில் கடல் நீரை நன்னீராகும் புதிய திட்டம்

தாமிரபரணி இனிமேல் விவசாயம், குடிநீருக்கு மட்டும் தான் - தூத்துக்குடியில் கடல் நீரை நன்னீராகும் புதிய திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தின் முள்ளக்காடு கிராமத்தில் 2292.38 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் திட்டப் பணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அடிக்கல் நாட்டினார்.

தமிழ்நாடு முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முற்போக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கியமாக, தென் மாவட்டங்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் விதமாக, தூத்துக்குடியில் புதிய சிப்காட் தொழில் பூங்கா உருவாக்கப்பட்டு, மோட்டார் வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

மேலும், செயற்கை நூற்பு இழை நிறுவனம், மின்னணு உற்பத்தி நிறுவனங்கள், அறைகலன் தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவையும் கொண்டுவரப்படவுள்ளன. இவை மட்டுமின்றி, கப்பல் கட்டுமான தொழிற்சாலை, பசுமை சக்தி உற்பத்தி நிறுவனங்கள், விண்வெளி சாதன உற்பத்தி நிறுவனங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

ஆனால், இங்குள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் தேவைகளுக்காக தற்போது தாமிரபரணி ஆற்றின் நீர் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே அதற்கு மாற்றாக, ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு கிராமத்தில் நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் (60 MLD) உற்பத்தித் திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் ஆலையை நிறுவி தண்ணீர் வழங்க வகை செய்யும் புதிய திட்டத்தை அரசு முன்னெடுத்துள்ளது.

இந்த திட்டம், தூத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது சுற்றுப் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் தடை இல்லாத நீர் வழங்கும் சேவையை உறுதி செய்யும். இதனால், வரும் காலங்களில் தாமிரபரணி ஆற்றின் நீரானது பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியில், சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அரசு செயலாளர் அருண் ராய், சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் செந்தில்ராஜ், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.