விஜய் ஹசாரே கோப்பை 2025-26: அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
விஜய் ஹசாரே கோப்பை தொடரின் 2026 சீசனில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை விதர்பாவின் அமன் மோகடேவும், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சௌராஷ்டிராவின் அன்குர் பன்வாரும் பெற்றுள்ளனர்
இந்தியாவின் புகழ் பெற்ற உள்ளூர் போட்டிகளில் ஒன்று விஜய் ஹசாரே கோப்பை ஒரு நாள் தொடர். இந்த தொடரின் நடப்பு சீசன் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இதன் இறுதிப் போட்டியில் சௌராஷ்டிரா அணியை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி விதர்பா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதன் மூலம் முதன்முறையாக விதர்பா அணி விஜய் ஹசாரே கோப்பையை வென்று சாதனையையும் படைத்தது.
ஏனெனில் முன்னதாக கடந்தாண்டு விஜய் ஹசாரே கோப்பை தொடரில் விதர்பா அணி இறுதிப் போட்டி வரை முன்னேறிய நிலையிலும் கோப்பையை நழுவவிட்டது. இந்நிலையில் தற்சமயம் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. மேலும் அந்த அணியின் அமன் மோகடே தொடர் நாயகன் விருதையும் வென்றார். இந்நிலையில் இத்தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
அதிக ரன்களை எடுத்த வீரர்கள்
- விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களைக் குவித்த வீரர் என்ற சாதனையை அமன் மோகடே படைத்துள்ளார். அவர் 10 இன்னிங்ஸில் மட்டுமே விளையாடி 90.44 என்ற சராசரியில் 814 ரன்களைக் குவித்தார். இதில் அவர் 5 சதங்களையும், ஒரு அரை சதத்தையும் பதிவு செய்துள்ளார். இது தவிர்த்து விஜய் ஹசாரே கோப்பை தொடர் வரலாற்றில் இரண்டு சீசன்களில் 800+ ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. .
- இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்த வீரர் கர்நாடகாவைச் சேர்ந்த தேவ்தத் படிக்கல் தான். அவர் இந்த சீசனில் 9 இன்னிங்ஸ்களில் விளையாடி 4 சதங்கள், 2 அரை சதங்கள் என 90.62 என்ற சராசரியில் 725 ரன்களைச் சேர்த்துள்ளார். இது தவிர, தொடர்ச்சியாக 3 சீசன்களில் 700+ ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையையும் படிக்கல் பெற்றுள்ளார்.
- அவருக்கு அடுத்த இடத்தில் சௌராஷ்டிரா அணி வீரர் ஹர்விக் தேசாய் 10 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள், 3 அரைசதங்களுடன் 64.55 என்ற சராசரியில் 581 ரன்களை குவித்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள்
- விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை சௌராஷ்டிர அணியைச் சேர்ந்த அன்குர் பன்வார் பெற்றுள்ளார். அவர் மொத்தமாக 10 போட்டிகளில் விளையாடி அதில் ஒரு 5 விக்கெட் ஹால், ஒரு 4 விக்கெட் ஹால் என மொத்தமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். குறிப்பாக விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் அபாரமாக பந்து வீசிய அவர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- பட்டியலில் இரண்டாம் இடத்தை இரண்டு வீரர்கள் பிடித்துள்ளனர். அந்த வகையில் ஆந்திரா அணியின் சத்யநாராயண ராஜு மற்றும் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஜீசன் அன்சாரி ஆகியோர், இந்த விஜய் ஹசாரே கோப்பை தொடரில் தலா 21 விக்கெட்டுகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ளனர். இருப்பினும் இதில் சத்யநாராயன ராஜு 7 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், ஜூசன் அன்சாரி 8 இன்னிங்ஸ்களில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- விதர்பா அணியைச் சேர்ந்த யாஷ் தாக்கூருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் யாஷ் தாக்கூர் விளையாடிய 9 இன்னிங்ஸ்களில் 2 முறை 4 விக்கெட் ஹாலை கைப்பற்றியதுடன் மொத்தமாக 19 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
- அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் டெல்லியைச் சேர்ந்த பிரின்ஸ் யாதவ், கோவாவைச் சேர்ந்த வாசுகி கௌசிக், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா கோஷ் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு அணி எதிர்பார்த்த அளவில் சிறப்பாக செயல்பட தவறியதுடன், அடுத்தடுத்த தோல்விகளால் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பையும் இழந்தது. குறிப்பாக அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு துறையானது பெரிதளவில் சோபிக்க தவறியதே அணியின் தோல்விக்கு காரணமாக பார்க்கபடுகிறது.
இந்த சீசனில் தமிழ்நாடு அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற பெருமையை அணியின் கேப்டன் ஜெகதீசன் பெற்றுள்ளார். அவர் 7 இன்னிங்ஸ்களில் விளையாடி ஒரு சதம், 4 அரை சதங்கள் என 56.71 என்ற சராசரியில் 397 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் ஒட்டு மொத்த பட்டியலில் அவருக்கு 24ஆம் இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.