சென்னை மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; ஒருவர் கைது!
மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை நவீன தொழில்நுட்ப உதவியுடன் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னையில் அண்மை காலமாக கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், விமான நிலையம், அரசியல் பிரமுகர்கள் வீடு, சினிமா பிரபலங்கள் வீடுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு செல்போன் எண்ணில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதை எடுத்துப் பேசிய காவல் அதிகாரிகளிடம் அவதூறாக பேசி மர்ம நபர், மதுரவாயல் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகக் கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
இதனால் பதற்றமடைந்த காவல் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், உடனடியாக இது குறித்து மதுரவாயல் காவல் நிலைய ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சென்னை காவல் பாதுகாப்பு பிரிவின் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் காவல் நிலையம் முழுவதும் தீவிர சோதனை செய்தனர்.
அவர்கள் நடத்திய தீவிர சோதனையில், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது. பின்னர் இது குறித்து மதுரவாயல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து, சைபர் கிரைம் காவல் பிரிவின் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மூலம் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பகுதியைச் சேர்ந்த பூபதி (43) என்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, பூபதி நொளம்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அயர்னிங் கடை வைத்து தொழில் செய்து வருவதும், இவர் கடந்த அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி மதுரவாயல் பகுதியில் உள்ள பூங்காவில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
மேலும், தான் கைதான ஆத்திரத்தில் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து பூபதியிடமிருந்து செல்போன் ஒன்றை பறிமுதல் செய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். காவல் நிலையத்திற்கே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியது.