யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் துவங்காதது ஏன்?- உயர்நீதிமன்றம்

யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் துவங்காதது ஏன்?- உயர்நீதிமன்றம்

கரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட யானைகள் புத்துணர்வு முகாமை மீண்டும் துவங்காதது ஏன்? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக வனத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

யானைகள், வனம் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் முரளிதரன், "கோவில் யானைகள் புத்துணர்வு முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு, பிற யானைகளுடன் பழக வைத்து, மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டது. இந்த நடைமுறை கரோனா காலத்திற்க்கு பின் நிறுத்தப்பட்டது. அதன் பின் மீண்டும் அது துவங்கப்படவில்லை" என தெரிவித்தார். இதையடுத்து, இது சம்பந்தமாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, வனத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதே போல, வனத்தில் இருந்து தாயை பிரிந்த குட்டி யானைகளை மீட்டு, அவற்றை மீண்டும் காட்டில் விடும் போது, அவை யானை கூட்டத்துடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறதா? என தெரியவில்லை. அதனால், தாயை பிரிந்த குட்டி யானைகளை மீட்டு, மறுவாழ்வு முகாமில் பராமரித்து, அவற்றை ஒன்றாக சேர்த்து மீண்டும் காட்டில் விடலாம் எனவும் மனுதாரர் ஆலோசனை தெரிவித்தார்.

இது சம்பந்தமாகவும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வனத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோயில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலை போக்கி அவை ஓய்வெடுக்க இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு முதுமலையில் யானைகள் புத்துணர்வு முகாம் தொடங்கப்பட்டது.

அப்போதைய முதல்வர் ஜெயலலிதா இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு வருடமும் 30 முதல் 45 நாட்கள் வரை இந்த புத்துணர்வு முகாம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த யானைகள் புத்துணர்வு முகாம் தடைப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த முகாமை மீண்டும் தொடங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசின் பதில் மனுவை பொறுத்து யானைகள் முகாம் மீண்டும் தொடங்கப்படுமா? என்பது தெரியவரும்.

இந்த வழக்கில் தமிழக வனத்துறை அடுத்த சில நாட்களில் பதில் மனு தாக்கல் செய்யும் என்றும் வனத்துறை உயரதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.