கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்!

கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேர் சுட்டுப் பிடிக்கப்பட்டது குறித்து கோவை காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார்.

கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தின் பின்புறம், கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ.2) அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் கல்லூரி மாணவி ஒருவர் தனது ஆண் நண்பருடன் கார் ஒன்றில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் அரவமற்ற அந்த சாலையில் திடீரென கார் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், காரில் இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தி மற்றும் இரும்பு கம்பியால் காரின் கண்ணாடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதனால் காரில் இருந்த ஆண் நண்பர் கீழே இறங்கியபோது, அவரது தலை மற்றும் கையில் அந்த 3 பேரும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து காரில் இருந்த இளம் பெண்ணை இழுத்துச் சென்று, அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட மூவரையும் பிடிக்க கோவை மாவட்ட போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 3 நபர்கள் குணா என்கிற தவசி, சதீஷ் என்கிற கருப்பசாமி, கார்த்திக் என்கிற காலீஸ்வரன் ஆகியோரை துடியலூர் அருகே போலீசார் சுட்டுப் பிடித்தனர். அவர்களை சுட்டுப் பிடித்தது குறித்து கோயம்புத்தூர் காவல் ஆணையர் சரவணசுந்தர் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், "இந்த சம்பவம் தொடர்பாக இரவு 11.20 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், 11.35 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்றனர். சம்பவம் நடைபெற்ற இடம் மிகவும் இருள் சூழ்ந்து இருந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க 5 மணி நேரம் ஆனது. அதிகாலை 4 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடிந்தது.

அவர் மீட்கப்பட்டபோது சுயநினைவோடு தான் இருந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குணா, சதீஷ், கார்த்திக் ஆகியோர் மீது கொலை வழக்கு உள்ளது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மதுபோதையில் இந்த செயலை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன், அவரது மோதிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன" என்று தெரிவித்தார்.