கணவரை தனது ஆண் நண்பருடன் சேர்ந்து கொன்று விட்டு சடலத்தின் அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் மனைவி ஒருவர் ஆபாச படம் பார்த்துள்ளார். இதுகுறித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் துக்கிராலா அருகேயுள்ள சிலுவூர் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர் லோகம் சிவ நாகராஜு (36) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் வெங்காய வியாபாரியாக இருந்து வந்துள்ளார்.
இவரது மனைவி லட்சுமி மாதுரி மற்றும் அவரது ஆண் நண்பர் சட்டனப்பள்ளியை சேர்ந்த கோபி ஆகிய இருவரும் சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வெங்காய வியாபாரத்தில் சிவ நாகராஜுவுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறு தொழிலுக்காக அவர் ஐதராபாத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதற்கிடையே மாதுரிக்கும், கோபிக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நெருக்கமாக மாறியுள்ளது.
தொடர்ந்து மாதுரி – கோபியின் திருமணத்தை மீறிய உறவுக்கு சிவநாகராஜு தடையாக இருந்து வந்து இருவரையும் தொடர்ந்து கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 18 ஆம் தேதி கணவர் சிவநாகராஜுவுக்கு பிரியாணி சமைத்துக் கொடுத்த மனைவி மாதுரி அதில் சுமார் 20 தூக்க மாத்திரைகளை போட்டுள்ள கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் மிகவும் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்று விட்டார்.
அதன்பின்னர் கோபியின் உதவியோடு தலையணையை வைத்து சிவநாகராஜுவை அழுத்தி அவரை மாதுரி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தின் அருகிலேயே அமர்ந்து விடிய விடிய ஆபாசப் படத்தை பார்த்ததாக, போலீஸ் விசாரணையில் அவர் தெரிவித்தார்.
அதிகாலை 4 மணிக்கு அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு போன் செய்த மாதுரி, தனது கணவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறி நாடகம் ஆடியுள்ளார்.
அதன்பின்னர் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டபோது, சிவநாகராஜுவின் உடலில் இருந்த காயங்களில் இருந்து ரத்தம் வழிவதை நண்பர்கள் பார்த்து, சந்தேகம் இருப்பதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் நடந்த இந்த கொடூர சம்பவம் தெரியவந்துள்ளது. தகாத உறவை கண்டித்த கணவரை ஆண் நண்பருடன் சேர்ந்து மனைவி கொன்ற சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.