சத்தியமங்கலத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு சீல்

சத்தியமங்கலத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு சீல்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

கோயம்புத்தூரை சேர்ந்த ஒலி விழிப்புணர்வு இயக்கம் நிறுவனர் கற்பகம் என்பவர் கடந்த மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், ''தேசிய வனவிலங்கு வாரியம் மலைப்பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதி பெறாமல் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்ட விரோதமாக தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மலைப்பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறி இது தொடர்பான ஆவணங்களையும் தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், ''சத்தியமங்கலம் புலிகள் காப்பக சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தங்கும் விடுதிகளை அகற்ற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுகுறித்து 4 வாரத்துக்குள் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சட்டவிரோத விடுதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். அதற்குள் சட்டவிரோத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லை என்றால் ஈரோடு கலெக்டர், வனத்துறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரித்து இருந்தனர். இதற்கிடையே தலைமலை, கேர்மாளம், ஆசனூர் பகுதிகளில் செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு கடந்த 6 ஆம் தேதி ஊரக வளர்ச்சி துறையின் அதிகாரிகள் நோட்டீஸ் விநியோகித்தனர். ஆனாலும் அவர்கள் இதுவரை எந்தவிதமான உரிய ஆணவங்களை சமர்ப்பிக்காததால் இன்று ஊரக உள்ளாட்சித்துறை உதவி இயக்குநர் உமா சங்கர் தலைமையில் 5 குழுக்களாக பிரிந்து வருவாய், காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து கேர்மாளம், தலைமலை மற்றும் ஆசனூரில் செயல்படும் சட்ட விரோத தங்கும் விடுதிகளுக்கு சீல் வைத்தனர்.