சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை டீனா
ஆந்திராவில் துலாபாரத்தில் வளர்ப்பு நாயின் எடைக்கு ஏற்ப காணிக்கை செலுத்திய நடிகை டீனா ஸ்ராவ்யா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
வளர்ப்பு நாய் மீதான பாசம் என்ற பெயரில், பாரம்பரிய திருவிழாவில் பழங்குடியின மக்களின் நம்பிக்கையை அவமதிக்கும் செயலில் நடிகை டீனா ஈடுபட்டதாக கூறப்படும் காட்சிதான் இது. வேண்டுதல் என்ற நினைப்பில் துலாபாரம் கொடுத்தவருக்கு அதுவே துன்பமாக மாறியுள்ளது. நடந்தது என்ன?
வெப் சீரிஸ்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் டீனா ஸ்ராவ்யா. இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்டவருக்கு சினிமா வாய்ப்பு தானாகவே தேடி வந்தது. ‘தி கிரேட் ப்ரீ வெட்டிங் ஷோ’ மற்றும் ‘கமிட்டி குர்ரால்லு’ உள்ளிட்ட தெலுங்கு படங்களில் நடித்து கவனம் ஈர்த்துள்ளார். இவரின், வெப் சீரிஸ்கள் தமிழில் டப் செய்து வெளியாகியுள்ளதால் தமிழ் ரசிகர்களுக்கும் நன்கு பரிச்சயமாகியுள்ளார்.
இந்த நிலையில் தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேடராம் கிராமத்தில் ஜாதாரா திருவிழாவில் கலந்து கொண்டார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு நடைபெறும் இந்த விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பழங்குடியின மக்கள் தேவதைகளாக வழிபடும் சம்மக்கா மற்றும் சாரல்லம்மா தெய்வங்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்படும். தாய்-மகள் தெய்வங்களான இவர்களை காலம் காலமாக வழிபட்டு வருகின்றனர்.
ஜாதாரா திருவிழாவின் போது பக்தர்கள் துலாபாரத்தில் அமர்ந்து எடைக்கு ஏற்ப வெல்லத்தை காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக நடிகை டீனாவும் துலாபாரத்தில் காணிக்கை செலுத்தியுள்ளார். ஆனால், அவர் தனது வளர்ப்பு நாயை துலாபாரத்தில் அமர வைத்து அதன் எடைக்கு ஏற்ப வெல்லத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்.
ஏற்கனவே, சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை, அதை வீடியோவாக பதிவிட்டுள்ளார். நடிகையின் வீடியோ பதிவுகளுக்கு லைக்ஸ் குவிவது வழக்கம். இம்முறை லைக்ஸ்க்கு பதில் கண்டனக் குரல் வலுத்துள்ளது. அத்துடன், பழங்குடியினரின் நம்பிக்கையை சிதைக்கும் செயலில் ஈடுபட்டதாக கூறி சர்ச்சையிலும் சிக்கியுள்ளார்.

விவகாரம் பூதாகரமானதை உணர்ந்த நடிகை, தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தான் செல்லமாக வீட்டில் வளர்த்து வரும் நாய்க்கு நோய் பாதிப்பு ஏற்பட்டதாக கூறியுள்ளார். தற்போது அது நோயில் இருந்து குணமடைந்ததால், நேர்த்திக்கடன் செலுத்தியதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தி இருந்தால் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இருந்த போதும் பழங்குடியின மக்கள் தேவதைகளாக வழிபடும் தெய்வங்களை அவமதிக்கும் செயலில் நடிகை டீனா ஈடுபட்டதாக கூறி, பக்தர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், இதுபோன்று எதிர்காலத்தில் நடக்காதவாறு ஜாதாரா விழா ஏற்பாட்டாளர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.