ராமதாஸ் அவசரக் கூட்டம் - கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் திணறல்

ராமதாஸ் அவசரக் கூட்டம் - கூட்டணியை முடிவு செய்ய முடியாமல் திணறல்

பிரதமர் மோடி பங்கேற்கும் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை (ஜன. 23) நடைபெற உள்ளது. இக்கூட்டத்துக்கு முன்பாக கூட்டணியை இறுதி செய்ய பாஜக – அதிமுக தீவிரம் காட்டி வருகிறது. இதன் எதிரொலியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக நேற்று அறிவித்து.

அதேநேரத்தில் தேமுதிக மற்றும் ராமதாஸ் தலைமையிலான பாமக இழுத்தடித்து வருவது, கூட்டணியை இறுதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் பாமக பிளவுப்பட்டு கிடக்கிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பாமக இணைந்துவிட்டது. அதேநேரத்தில் ராமதாஸ் தலைமையிலான பாமக பிடிக்கொடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. அவரையும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற, பாஜக, அதிமுக அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் அவசர நிர்வாகக் குழுக் கூட்டம் நேற்று திடீரென கூடியது. நிர்வாக குழு உறுப்பினரும், இணை பொதுச் செயலாளருமான அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அருள் எம்எல்ஏ, “தமிழகத்தில் 40 தொகுதிகளில் போட்டியிடும் தொகுதிகளை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்துள்ளார். கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. வெற்றிக் கூட்டணி அமைப்பார். அவர் இடம்பெறும் கூட்டணியில் இருப்பவர்தான் முதல்வர் பதவி ஏற்பார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா? மற்றும் மோடி பங்கேற்கும் கூட்டத்துக்கு அழைப்பு கொடுக்கப்பட்டதா? என்பதை ராமதாஸிடம்தான் கேட்க வேண்டும். நான் எதுவும் கருத்து சொல்ல முடியாது.

தேர்தல் தேதி அறிவிப்புக்கு 40 நாட்கள் உள்ளன. பொறுமையாக முடிவு செய்யலாம். ராமதாஸிடம் இருந்து அவசரமாக வரச்சொல்லி நிர்வாக குழு உறுப்பினர்கள் 18 பேருக்கு அழைப்பு வந்தது. அதனால் வந்துள்ளோம். ஊடகத்திடம் சொல்ல முடியாத சில விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும்” என்றார்.

ஜனவரி 18-ம் தேதி நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றுள்ள நிலையில், இரு நாள் இடைவெளியில் 2-வது நிர்வாகக் குழுக் கூட்டத்தை ராமதாஸ் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி இடம்பெற்றுள்ள கூட்டணியில் இணைவதற்கு கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, அருள் எம்எல்ஏ உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக கூறப்படும் நிலையில், திமுக கூட்டணியில் இணைவதற்கு விசிக எதிர்ப்பு தெரிவிப்பதால், கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாமல் ராமதாஸ் திணறி வருவதாக கூறப்படுகிறது.