வரதட்சணை கொடுமையால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு; விழுப்புரத்தில் சோகம்
திருமணமான மூன்றே மாதத்தில் வரதட்சணை கொடுமையால் ஆசிரியை எடுத்த விபரீத முடிவு குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே பக்கிரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணமூர்த்தி. இவரது மகள் பிரியங்கா (30). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரியங்காவுக்கும், புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் பகுதி பிள்ளையாா்குப்பத்தைச் சோ்ந்த காா்த்திகேயன்(36) என்பவருக்கும் (பொதுப்பணித் துறையில் குடிநீா் தொட்டி இயக்குபவராக பணிபுரிபவர்)கடந்த 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தின்போது, மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை பொருட்கள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், பிரியங்காவின் கணவா் காா்த்திகேயன் மற்றும் மாமியாா் கற்பகவள்ளி 5 பவுன் நகைகளை வரதட்சணையாகக் கேட்டு வந்துள்ளனர். இதனால் பிரியங்கா மிகுந்த மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவீட்டார் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
மேலும், இதன் விளைவாக பிரியங்காவுக்கும் அவரது கணவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டு கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.இதனால் பிரியங்கா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், திடீரென பிரியங்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கடந்த செவ்வாய்கிழமை இரவு விபரீத முடிவு எடுத்துக் கொண்டார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் பிரியங்காவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியங்கா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக பிரியங்காவின் தாய் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், 'எனது மகள் பிரியங்காவுக்கு திருமணம் நடைபெற்றபோது, 10 பவுன் கொடுப்பதாக மாப்பிள்ளை வீட்டாரிடம் தெரிவித்திருந்தோம். ஆனால், அப்போதைய நேரத்தில் 5 பவுன் தங்கம் மட்டுமே வரதட்சணையாக கொடுக்க முடிந்தது. மீதமுள்ள 5 பவுன் நகையை கொடுக்க வேண்டும் என்று எனது மகளை அவரது கணவர் வீட்டார் கொடுமை செய்து வந்தனர்.
மேலும், எனது மகள் பிரியங்காவை அவரது கணவர் செல்ஃபோனில் ஆபாசமாக வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, 5 பவுன் தங்க நகையை வரதட்சணையாக தர வேண்டும் என்றும், இல்லையெனில் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாகவும் மிரட்டி உள்ளார். இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த எனது மகள் பிரியங்கா வீட்டில் விபரீத முடிவு எடுத்து கொண்டார். எனவே, எனது மகளின் தற்கொலைக்கு காரணமான அவரது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.
திருமணமான மூன்றே மாதத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு குறித்து விழுப்புரம் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டு வருகிறார்.