மாணவியை கத்தியால் சரமாரியாக குத்திய மாணவன் - கோவை கல்லூரியில் பயங்கரம்
சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவியை சக மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில் கோவை ஆர்.எஸ் புரம் பகுதியை சேர்ந்த மாணவி பி.எஸ்.சி ஐ.டியில் முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவியும் அவரது வகுப்பில் படிக்கும் ஓர் மாணவரும் நட்பாக பழகி வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், மற்ற மாணவர்களுடன் பேசுவது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, மாணவர் அந்த மாணவியை வேறு சில மாணவர்களுடன் பேசக் கூடாது என அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில், இன்று (ஜன.22) காலை மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்திற்கு மேல் ஆத்திரமடைந்த மாணவர், தான் மறைந்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் கழுத்து, கன்னம், கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவி அதே இடத்தில் சுருண்டு விழுந்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை கண்ட கல்லூரி ஊழியர்கள், அவரை மீட்டு அதே கல்லூரி குழுமத்தைச் சேர்ந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த சரவணம்பட்டி காவல்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கோவை விமான நிலையம் பின்புறம் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை சிலர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அச்சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள் இந்த கத்திக்குத்து சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பது போல் வன்முறையும் எதற்கும் தீர்வல்ல என்பது குறித்து இளைய தலைமுறை மாணவர்களுக்கு அழுத்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர் கைது: இந்த சம்பவம் குறித்து கோவை மாநகர காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், 'கோவையை சேர்ந்த ஹர்ஷவர்தன் (18) என்பவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே கல்லூரியில் படித்து வரும் மாணவி ஒருவருடன் கடந்த ஆறு மாதங்களாக நட்பாக பழகி வந்துள்ளதாகத் தெரிய வருகிறது. மேற்படி மாணவி வேறு சில மாணவர்களுடன் பேசி பழகி வந்திருக்கிறார் என தெரிய வருகிறது. இதனால் அவர் மீது கோபம் அடைந்த ஹர்ஷவர்தன் அவரிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்த சூழ்நிலையில், மேற்படி மாணவியின் மீது கோபம் கொண்டிருந்த ஹர்ஷவர்தன், அவரது வீட்டிலிருந்து காய்கறி வெட்டப் பயன்படுத்தும் சிறிய கத்தியை மறைத்து எடுத்துக் கொண்டு வந்துள்ளார். தொடர்ந்து காலை 8.30 மணியளவில் கல்லூரி வளாகத்தில் வைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்து மற்றும் கைகளில் தாக்கி காயப்படுத்தியுள்ளார் எனத் தெரியவருகிறது. காயமுற்ற மாணவி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நல்ல நிலையில் இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கொலை முயற்சி மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.