மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியின்போது கேட்கப்படும் 33 கேள்விகள் என்னென்ன? பட்டியலை வெளியிட்ட மத்திய அரசு
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணியின் முதல்கட்டமாக நாடு முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ள வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியின்போது கேட்கப்பட வேண்டிய 33 கேள்விகள் என்னென்ன என்பது குறித்த விவரத்தை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்புடன்கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
அதன்படி, பனிப்பொழிவு மிகுந்த பகுதிகளான ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் 2026, அக்டோபர் 1-ஆம் தேதி இந்த கணக்கெடுப்பு தொடங்கும். இவை தவிர, நாட்டின் பிற பகுதிகளில் 2027 மார்ச் 1 ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு துவங்கும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு முன்னதாக, நாடு முழுவதும் வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணியானது வரும் ஏப்ரல் மாதம் தொடங்கும் என்றும் மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த கணக்கெடுப்பு பணியின்போது ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடமும் களப் பணியாளர்கள் கேட்க வேண்டிய கேள்விகள் என்னென்ன என்பது குறித்த விவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, வீட்டின் தரை, சுவர், மேற்கூரை ஆகியவற்றின் கட்டுமான அடிப்படையில் அது எந்த வகையான வீடு, குடும்ப தலைவரின் பெயர், வீட்டில் பொதுவாக தங்கியிருக்கும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, வீட்டில் உட்கொள்ளப்படும் முக்கிய உணவு தானியம் என்ன?, வீட்டில் குடிநீர், குளியலறை மற்றும் கழிவுநீர் வசதிகள் உள்ளனவா?, குடிநீருக்கான ஆதாரம் என்ன?, எந்த வகையான கழிப்பறை வசதி பயன்பாட்டில் உள்ளது? ஆகிய கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
மேலும், வீீட்டில் எந்த விதமான சமையல் எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது? (எல்பிஜி/பிஎன்ஜி), இணைய வசதி உள்ளதா? வானொலி பயன்பாட்டில் உள்ளதா? தொலைக்காட்சி இருக்கிறதா? கணினி/ மடிக்கணினி பயன்பாடு, தொலைபேசி/செல்ஃபோன்/ஸ்மார்ட்ஃபோன் பயன்பாடு, சைக்கிள்/ஸ்கூட்டர்/ மோட்டார் சைக்கிள் பயன்பாடு, கார்/ஜீப்/ வேன் பயன்பாடு, சம்பந்தப்பட்ட நபரின் மொபைல் எண் (மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளுக்கு மட்டும்) என்பன உள்ளிட்ட 33 கேள்விகள் இந்த கணகெடுப்புப் பணியின்போது கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக கடந்த 2011-இல் எடுக்கப்பட்டது.