ஜம்மு காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்; 10 வீரர்கள் உயிரிழப்பு
ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனம் விபத்துக்குள்ளானதில் 10 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் தோடா மாவட்டம், தனலாவில் உள்ள படேர்வா - சாம்பா சாலையில் சென்று கொண்டிருந்த ராணுவ வாகனம் திடீரென பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 ராணுவ வீரர்கள் பயணித்த நிலையில், 10 வீரர்கள் படுகாயமடைந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து படேர்வா மாவட்ட மருத்துவ அதிகாரி ஈடிவி பாரத் ஊடகத்திடம் விவரிக்கையில், '' விபத்துக்குள்ளான வாகனத்தில் 21 வீரர்கள் பயணித்துள்ளனர். அவர்களில் 10 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 10 ராணுவ வீரர்கள் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயத்துடன் ஒரு ராணுவ வீரர் படேர்வா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'' என்றார்.
ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், '' உயரமான சாலையில் கடும் உறைபனி படிந்து இருந்ததால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் சிகிச்சையை மேற்பார்வையிட உயர் அதிகாரிகள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீரர்களுக்கு மேல்சிகிச்சைகள் தேவைப்படும்பட்சத்தில் அவர்களை உடனடியாக வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு மாற்ற ஆம்புலன்ஸ்கள் தயாராக உள்ளன.'' என தெரிவித்தனர்.
இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, '' தோடாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தில் நமது துணிச்சல் மிகுந்த ராணுவ வீரர்கள் 10 பேர் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
நமது வீரர்களின் சிறந்த சேவை மற்றும் உயர்ந்த தியாகத்தை நாம் எப்போதும் நினைவில் கொள்வோம். வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல். இந்த துயரமான தருணத்தில் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுக்கு துணையாக நிற்கிறது. காயமடைந்த 10 வீரர்கள் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிறந்த சிகிச்சையை உறுதி செய்ய மூத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.