பூனையை கொடூரமாக தாக்கி கொன்ற போதை ஆசாமி! தேனி அருகே அதிர்ச்சி சம்பவம்!
தேனி: ஆண்டிபட்டியில் டாஸ்மாக் மதுபான விடுதியில், போதை ஆசாமி ஒருவர் பூனையை கொடூரமாக தாக்கி கொல்லும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி - தெப்பம்பட்டி சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுபான கடையில், சில நாட்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன், மோகன், நவீன் ஆகிய மூன்று பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர்.
அப்போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த ஒரு பூனை அவர்கள் குடிக்கும் இடத்தில் சுற்றி சுற்றி வந்துள்ளது. அந்த நேரத்தில், மது போதையில் இருந்த கண்ணன், அந்த பூனையை வாலைப் பிடித்து தூக்கி, அப்படியே தரையில் அடித்துள்ளார். இதில், அந்த பூனை சம்பவ இடத்திலேயே துடிதுடி இறந்தது.
இதனை நேரில் பார்த்துக் கொண்டிருந்த பார் ஊழியர் சந்திரசேகர், கண்ணனையும் அவரது நண்பர்களையும் கண்டித்துள்ளார். அப்போது கண்ணன் உள்ளிட்ட மூன்று பேரும், சந்திரசேகரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதை தட்டிக் கேட்க வந்த மற்றொரு ஊழியரான செல்லபாண்டியையும், அந்த மூன்று பேர் கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடியுள்ளது.
இந்த சம்பவத்தில், படுகாயமடைந்த சந்திரசேகர், செல்லப்பாண்டி ஆகிய இருவரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மதுபான விடுதியில் நடந்த இந்த மோதல், பூனையை கொலை செய்த சம்பவங்கள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்துள்ளது.
இந்த காட்சியை கொண்டு சந்திரசேகர், ராஜதானிகோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், மது குடிக்க வந்த 3 பேரில் நவீன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன், மோகன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.