'இந்தியாவில் விளையாட மாட்டோம்'- உலகக் கோப்பை தொடரை புறக்கணிக்கும் வங்கதேசம்
நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம், ஆனால் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல் தெரிவித்துள்ளார்.
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பிப்ரவரி 7ஆம் தேதி முதல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சிகளில் இறங்கியுள்ளன. மேலும் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலகக் கோப்பைத் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது. இதனால் எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் வங்கதேசம் பங்கேற்குமா? இல்லையா? என்ற கேள்விகள் அதிகரித்தது.
இதற்கிடையே சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், வங்கதேச கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், இந்தியாவிற்கு பதிலாக வேறு இடத்தில் வங்கதேச அணியின் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருந்தது.
இருப்பினும் வங்கதேசத்தின் கோரிக்கையை ஏற்க மறுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஜனவரி 21 ஆம் தேதிக்கு முன் தங்களுடைய இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தது. இந்த சூழ்நிலையில் தான் எதிர்வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேச அணி விலகியதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய வங்கதேச கிரிக்கெட் வாரிய தலைவர் அமினுல் இஸ்லாம் புல்புல்,"நாங்கள் உலகக் கோப்பையில் விளையாட விரும்புகிறோம், ஆனால் இந்தியாவில் விளையாட மாட்டோம். நடைபெற்ற ஐசிசி வாரியக் கூட்டத்தில் சில அதிர்ச்சியூட்டும் முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக முஸ்தஃபிசூர் ரஹ்மான் தொடர்பான சில விவகாரங்களில் இந்தியா தன்னிச்சையாக முடிவெடுத்தது. அதுகுறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை.
மேலும், இந்தியாவிலிருந்து எங்கள் போட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துவிட்டது. உலக கிரிக்கெட்டின் நிலை குறித்து எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை. அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது. கிரிக்கெட் இப்போது ஒலிம்பிக்கில் இடம் பெற போகிறது. ஆனால் 20 கோடி மக்களைக் கொண்ட ஒரு நாடு உலகக் கோப்பையில் விளையாடவில்லை என்றால், அது ஐசிசியின் தோல்வி" என்று கூறியுள்ளார்.
அதேபோல் வங்கதேச விளையாட்டு ஆலோசகர் ஆசிஃப் நஸ்ருல், "பாதுகாப்பு விவகாரத்தில் ஐசிசி எங்களை நம்ப வைக்கத் தவறிவிட்டது. எங்கள் குறைகள் குறித்து ஐசிசி எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. இந்திய அரசாங்கம் கூட எங்களை தொடர்பு கொண்டு, வீரர்களின் பாதுகாப்பு குறித்து உறுதிப்படுத்த முயற்சிக்கவில்லை. நாங்கள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை. எங்களின் கோரிக்கையை ஏற்று இலங்கையில் விளையாட ஐசிசி எங்களுக்கு அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் காரணமாக இருநாட்டு எல்லைகளிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வங்கதேசத்தில் நடைபெற்று வரும் சம்பவங்களைத் தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் அந்நாட்டு கிரிக்கெட் வீரரான முஸ்தஃபிசூர் ரஹ்மான் பிசிசிஐ உத்தரவின் பேரில் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.