கர்நாடகா மாநிலத்தில், ஆளுநர் தாவர்சந்த் கெலாட் தனது உரையை வாசிக்காமல் வெளியேறி சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் 2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று சட்டமன்றத்தில் ஆளுநர் உரையை அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் முழுமையாக வாசிக்காமல் உரையின் முதல் மற்றும் இறுதி வரியை மட்டும் வாசித்துவிட்டு அவையில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.
இதனால், கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் தனது உரையைப் புறக்கணிக்க முக்கிய காரணங்களாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கர்நாடகா அமைச்சரவை தயாரித்து கொடுத்த ஆளுநர் அறிக்கையில், சமீபத்தில் மத்திய அரசு மாற்றிய மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்கள் குறித்த விமர்சனங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
அதேபோல், நிதிப் பகிர்வு, ஜி.எஸ்.டி. தொடர்பான அதிருப்தி, வறட்சி நிவாரணத்தில் தாமதம் மற்றும் 15வது நிதி ஆணையத்தின் கீழ் அநீதி இழைக்கப்படுவதாகக் கூறப்படுவது உள்ளிட்டவை இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சட்டமன்றத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, “ஒவ்வொரு வருடமும் சட்டமன்றத்தின் கூட்டத்தொடர், அமைச்சரவை தயாரித்து கொடுக்கும் ஆளுநர் உரையோடு தொடங்கும். இது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.
இன்று, அமைச்சரவை தயாரித்து கொடுத்த உரைக்கு பதிலாக ஆளுநர் தானே தயாரித்த உரையை வாசித்தார். இது இந்திய அரசியல் அமைப்பை மீறும் செயல்.
அரசியல் அமைப்புச் சட்டம் 176 மற்றும் 163 ஆகியவற்றை மீறும் செயல். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அவர் தனது கடமைகளைச் செய்யவில்லை. எனவே, ஆளுநரின் அணுகுமுறைக்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தப் போகிறோம். உச்ச நீதிமன்றத்தை அணுகுவதா இல்லையா என்பது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த 20ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் ஆளுநர் உரையோடு தொடங்கியது. ஆனால், ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை வாசிக்காமல் வெளிநடப்பு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.