ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏஐ தகவல் மையம் - அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் ஏஐ தகவல் மையம் - அமைச்சர் டிஆர்பி ராஜா தகவல்

10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாட்டில் ஏஐ தகவல் மையம் அமைக்கப்படும் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சர்வம் ஏஐ நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு தகவல் மையம் அமைப்பதற்கு 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்த திட்டம் குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி மற்றும் சர்வம் ஏஐ நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரதிஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது பேசிய அமைச்சர் டிஆர்பி ராஜா, ''உலகமே ஏஐ நோக்கி நகர்ந்து வருகிறது. வேலைவாய்ப்புகளுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லாமல் தற்போது உள்ள வேலைவாய்ப்புகளை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் வகையில், சர்வம் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 1,000 நபர்களுக்கு உயர் ஊதியம் வழங்கும் பணி வழங்கப்படும். தமிழக மக்களுக்கு மிகவும் உதவி அளிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படும்.

இந்தியாவில் முதல் மாநிலமாக ஏஐ தகவல் மையம் தமிழ்நாட்டில் கொண்டுவரப்பட உள்ளது. தமிழில் முதல் முறையாக ஏஐ தொழில்நுட்பம் உருவாக உள்ளது. இதன் மூலம் நம் மக்களின் தகவல் திருடப்படுவது தவிர்க்கப்படும். மேலும் தமிழகத்திற்கு என தனிப்பட்ட ஒரு தனி மையம் இயக்கப்படும். இதன் மூலம் பல்வேறு வகையிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்'' என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய ஐஐடி இயக்குநர் காமகோடி, ''விவசாயம், மருத்துவம் மற்றும் பல்வேறு துறையில் ஏஐ நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு துறையும், தனியார் நிறுவனங்களும் தங்களின் தரவுகளை ஒரே பகுதியில் இணைத்து கொள்ளும் வகையில் அமைக்கப்படும் ஒரு மையமாக இது இருக்கும். பல்வேறு துறைகளில் ஏஐ பயன்படுகிறது. அவற்றை எல்லாம் ஒருங்கிணைக்கும் வகையில் தகவல்களை சேகரித்து அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் அனைத்து தரவுகளும் இதில் சேரும். பல தரவுகளை சேர்த்து ஒரு கொள்கையை உருவாக்குகிறோம். இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.