முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவு: பென்னி குயிக் சிலைக்கு மரியாதை!

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், விவசாய சங்கத்தினர் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குய்க் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த முல்லை பெரியாறு அணையை ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னி குய்க் கட்டினார். தென் தமிழக மக்களின் வாழ்க்கையை மாற்றிய பொறியாளர் ஜான் பென்னி குய்க்கை, மனித கடவுளாக இப்பகுதி மக்கள் பாவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
1895ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணை கட்டி முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி முதல் முதலாக தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இன்றுடன் 130 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதையடுத்து தமிழக-கேரள எல்லையான தேனி மாவட்டம் கூடலூர் லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குய்க் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு ஒருங்கிணைந்த ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சி சார்பிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், முல்லைப்பெரியாறு அணை கட்டும்பொழுது உயிர் நீத்தவர்களுக்கு பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து முல்லை பெரியாற்றில் மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர், சாலையில் சென்ற பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், கர்னல் ஜான் பென்னி குய்க் புகழ் நீடூழி வாழ வேண்டும் என்று புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.