தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் ஓடாது: ஆம்னி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் இருந்து சென்ற ஆம்னி பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்து கேரளாவுக்கு இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "கேரளா மாநிலத்திற்கு இன்று (07.11.2025) 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் சென்றன. இதில் தமிழகத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பேருந்துகளை கேரளா போக்குவரத்து துறையினர் திடீரென சிறை பிடித்து அவற்றில் பயணம் செய்த பயணிகளை நடுவழியிலேயே இறக்கி விட்டுள்ளனர். இதனால் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான பயணிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மேலும் சிறை பிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கு கேரளா போக்குவரத்து துறை ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்துள்ளது. இந்த நடவடிக்கை இரு மாநிலங்களுக்கிடையேயான நீண்டநாள் நல்லுறவையும், பொதுப்போக்குவரத்து ஒத்துழைப்பையும் பாதிக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

இந்த நிகழ்வை தொடர்ந்து 07.11.2025 இரவு 8 மணி முதல் தமிழ்நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை இயக்குவதில்லை என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இரு மாநிலங்களுக்கு இடையேயான பொதுபோக்குவரத்து பாதிப்படையும் என்பதோடு, தமிழ்நாட்டில் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.