சென்னையில் முன்பதிவில்லா பேருந்துகளுக்கு தட்டுப்பாடு
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு செல்வோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், முன்பதிவில்லா பேருந்துகள் கிடைக்காததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் சிரமமின்றிச் செல்வதற்காக ஜனவரி 9 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தமிழக அரசு போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடந்த ஒன்பதாம் தேதி முதல் நேற்று (ஜன 13) இரவு எட்டு மணி வரை, ஐந்து நாட்களில் மட்டும் சுமார் 6 லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஐந்தாவது நாளாக இயக்கப்படும் சிறப்பு பேருந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது பயணிகளிடம் பேருந்து நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், போதிய பேருந்துகள் இருக்கையுடன் இருக்கிறதா எனவும் கேட்டறிந்தார்.
அதற்கு அங்கிருந்த பெண் பயணி ஒருவர், தான் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெங்களூரு செல்ல காத்திருப்பதாகவும், ஆனால் இன்னும் முன்பதிவில்லா பேருந்து வரவில்லை எனவும் முறையிட்டார். அதேபோல் அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களும் திருச்சி செல்வதற்கும் முன்பதிவில்லா பேருந்துகள் இல்லை எனக் கூறினர்.
இதைக் கேட்ட அமைச்சர், பேருந்துகள் அதிகளவில் இயக்கப்பட்டு வருவதாகவும், ஒன்றன்பின் ஒன்றாக பேருந்து நிலையத்துக்குள் வந்துகொண்டிருப்பதாகவும் கூறியதோடு, உடனடியாக முன்பதிவில்லா பேருந்து ஒன்றை வரவைத்து இளைஞர்களை அனுப்பி வைத்தார். மேலும் பேருந்து நிலையத்தில் இருந்த பல பயணிகள் முன்பதிவு பேருந்துகள் மட்டுமே வந்துகொண்டிருப்பதாகவும், முன்பதிவில்லா பேருந்துகளுக்கு பல மணி நேரம் காத்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து சென்னை பெருங்குடியைச் சேர்ந்த பயணி சரவணன் கூறுகையில், “நான் எனது குடும்பத்துடன் துறையூர் செல்வதற்காக சுமார் ஒன்றரை மணிநேரம் காத்துக்கொண்டிருக்கிறேன். அதிகாரிகளிடம் கேட்டால் பேருந்து வரும் என மட்டுமே அலட்சியமாக பதில் கூறுகின்றனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்யப்பட்ட பேருந்துகளாகவே இருக்கின்றன” என்றார் வருத்தத்துடன்.
மற்றொரு பயணி யஸ்வந்த் கூறுகையில், “முன்பதிவு செய்யப்படாத பேருந்துகள் வருவதற்கு பல மணி நேரம் ஆகிறது. அதிகாரிகள் யாரும் முறையாக பதில் கூறாமல் அலட்சியமாக கூறுகிறார்கள். பேருந்து நிலையத்தையே சுற்றி வரவேண்டிய நிலை தான் இருக்கிறது. என்னைப் போன்று இங்கிருக்கும் நூற்றுக்கணக்கான பயணிகள் முன்பதிவில்லா பேருந்துகளை தேடி பேருந்து நிலையம் முழுவதும் சுற்றி வருகிறார்கள். இருக்கும் நிலைமையை பார்க்கும்போது சென்னைக்கே திரும்ப சென்றுவிடலாம் என்று தோன்றுகிறது” என வேதனை தெரிவித்தார்.