தீபாவளியை முன்னிட்டு அக்.22 வரை 147 சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே நடவடிக்கை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தெற்கு ரயில்வேயில் அக்.22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை நாளை (20-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில், அக்.16-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 147 சிறப்பு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 16, 17 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மொத்தம் 37 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. நேற்று (18-ம் தேதி) சென்னை, போத்தனூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மொத்தம் 24 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இன்று (19-ம் தேதி) 19 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
தீபாவளி திருநாளான நாளை (20-ம் தேதி) மதுரை, தூத்துக்குடி, தாம்பரம், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 23 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன, இதுபோல, தீபாவளிக்கு மறுநாளான நாளை மறுதினம் (21-ம் தேதி) 25 சிறப்பு ரயில்களும், 22-ம் தேதி 19 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன. இத்தகவலை தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.