திமுகவை யாராலும் அழிக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திமுகவை யாராலும் அழிக்க முடியாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்கப் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஒரு போதும் அது நடக்காது. திமுகவை யாராலும் அழிக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் திருமணம், சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. இதில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், அன்பில் மகேஸ், சிவசங்கர், மெய்யநாதன், திமுக துணை பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பழனியாண்டி திருமணத்தை முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நடத்தி வைத்தார். பழனியாண்டி சகோதரர் மற்றும் அவரது மூத்த மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்தேன். தற்போது, அவரின் இளைய மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்துள்ளேன். தொடர்ந்து, அவரின் பேரன், பேத்திகள் திருமணத்தையும் நான் நடத்தி வைப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது.

திமுகவை கழகம் என்று மட்டுமல்லாமல் இயக்கம் எனவும் கூறுவார்கள். இயக்கம் என்பதற்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருப்பது தான் இயக்கம். நம்மை வீழ்த்துவதற்காக எதிரிகள் புதுப்புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள்.

இதற்காக வருமான வரித் துறையையும், சிபிஐயும் ஆயுதமாக ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுகவை அழிக்க பார்க்கிறார்கள்.

ஆனால், மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் நடக்கலாம். தமிழ்நாட்டில் ஒருபோதும் அது நடக்காது. திமுகவை அவர்களால் அழிக்க முடியாது. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளது. உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும்” என்றார்.