டிடிஎஃப் வாசனின் முதல் திரைப்படம்! பிரமாண்டமாக நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா
பிரபல் யூடியூபர் டிடிஎஃப் வாசனின் முதல் படமான ஐ.பி.எல் திரைப்படம் நவம்பர் 21 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
டிடிஎஃப் வாசன், குஷிதா, கிஷோர், சிங்கம் புலி, அபிராமி, ஆடுகளம் நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ஐ.பி.எல். இப்படத்தின் 'டிரெய்லர் வெளியீட்டு விழா’ சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி, பேரரசு, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பேசிய இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், “என்னுடைய சிறு வயதில் நன்றாக கேரம் விளையாடுவேன். ஒரு நாள் கோயம்புத்தூரில் நடைபெற்ற மிக பெரிய விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன். அப்போது ஒருவர் என்னுடன் எதிர் விளையாட்டு விளையாடினார். என்னை அறியாமல் நான் அவருக்கு ஆட்டத்தை விட்டு கொடுத்து விட்டேன். அப்போது அவர் ஆயிரம் ரூபாய்க்கு மில் வேலை செய்து வந்தார். அன்றில் இருந்து அவரது வாழ்க்கை மாறியது. அவரை என்னுடன் சென்னை அழைத்து வந்து என்னுடைய தொழில் சார்ந்த விஷயங்களை பார்த்துக் கொள்ள வைத்தேன்.
நானும் அவரும் நெருங்கிய நண்பரானோம். பின் அவர் பல படங்களில் நடித்தார். தொடர்ந்து தினா, ரெட்டை ஜடை வயசு, ஆயுத பூஜை ஆகிய படங்களை தயாரித்தார். அவர் உங்கள் அனைவர் மனதிலும் பதிந்துள்ள ‘இன்று போய் நாளை வா’ படத்தில் வரும் ‘ஏக் காவ் மே ஏக் கிசான் ரகுதாத்தா’ வசனத்தை பேசிய என்.பழனிச்சாமி.
அவரது நண்பர் மற்றும் வெற்றி மாறனின் உதவியாளரான கருணாநிதி தான் இந்த படத்தை இயக்கியதாக கூறினார்கள். அப்போதே படம் நன்றாக இருக்கும் என நான் உறுதிப்படுத்திக் கொண்டேன். முதல் படத்தில் நடிக்கிறோம் என்கிற பதட்டமில்லாமல் டிடிஎஃப் வாசன் நடித்திருக்கிறார். இந்த படம் உண்மைச் சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. உண்மை சம்பவங்கள் திரைக்கதையாக எடுக்கப்படுவதை வரவேற்கிறேன். இந்த ஆர்வம் அனைத்து சினிமா பிரியர்கள் மத்தியிலும் வர வேண்டும்” என்றார்.
தொடர்ந்து மேடையில் பேசிய டிடிஎஃப் வாசன், “எனக்கு மிகவும் பிடித்த நடிகை அபிராமி. அந்த காலத்தில் இருந்து இப்போது வரை அப்படியே இளமையாக இருக்கிறார். இவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். அவருடன் நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. என்னை வைத்து படம் இயக்கிய இயக்குநருக்கு நன்றி. நான் பொதுவெளியில் நடனமாட கூச்சப்படுவேன். திருவிழாவில் கூட நடனம் ஆடுவதை பார்ப்பேன், ஆடமாட்டேன். யாரும் இல்லாத இடத்தில் நின்று தனியாக நடனம் ஆடுவேன். ஆனால், எனக்கு நம்பிக்கை கொடுத்து நடன இயக்குனர் என்னை ஆட வைத்துள்ளார்” என்றார்.