பிரதமர் மோடி முன்னிலையில் பாஜக புதிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்
பாஜக புதிய தலைவராக, பிரதமர் மோடி முன்னிலையில் நிதின் நபின் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
பாஜகவின் 11-வது தேசிய தலைவராக இருந்து வந்த ஜே.பி. நட்டாவின் பதவிக்காலம் கடந்த 2023 ஆம் ஆண்டோடு நிறைவடைந்தது. எனினும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் காரணமாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பாஜகவின் புதிய தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், பாஜகவின் செயல் தலைவராக நிதின் நபின் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தேசியத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், நிதின் நபின் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மேலும் பல்வேறு மாநில பாஜக சார்பில் அவருக்காக 36 வேட்புமனுக்களும், பாஜக தலைமை சார்பில் ஒரு வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து வேட்புமனுக்களுமே நிதின் நபிக்கு ஆதரவாக, அவரது பெயரில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. ஒவ்வொரு வேட்புமனுவிலும் அந்த கட்சியின் தேசிய மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் 20 பேர் கையெழுத்திட்டிருந்தனர்.
இதற்கிடையே, நேற்று நிதின் நபினுக்கு போட்டியாக வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், அவர் போட்டியின்றி பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட உயர் மட்டத் தலைவர்களின் ஆதரவுடன் நிதின் நபின் பாஜகவின் தேசிய தலைவராக இன்று அக்கட்சி அலுவலகத்தில் முறைப்படி பொறுபேற்றார்.
12-வது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபின், மிக இளம் வயதில் (45 வயது) அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய தலைவராக பதவியேற்றுள்ள நிதின் நபினின் பதவிக்காலம் வரும் 2029 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை இருக்கும். தற்போது பீகார் மாநில அமைச்சராக நிதின் நபின் இருந்து வருகிறார்.
அவர் கடந்த 2006, 2010, 2015, 2020, 2025 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து 5 முறை பீகாரின் பாங்கிபூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நிதின் நபினின் தேர்வு முக்கியத்துவம் பெற்றுள்ளது.