மனைவியுடன் கள்ளத் தொடர்பு! வெல்டிங் தொழிலாளியை கொலை செய்த கணவன்

மனைவியுடன் கள்ளத் தொடர்பு! வெல்டிங் தொழிலாளியை கொலை செய்த கணவன்

மனைவியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்த வெல்டிங் தொழிலாளியை மகனுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்த கணவன் உட்பட மூவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகாவிற்கு உட்பட்ட செக்கடிகுப்பம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் வேலு (44). சிப்காட் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி வித்யா (32) என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், வேலுவிற்கு அதே பகுதியை சேர்ந்த மீனா என்ற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

நீண்ட நாட்களாக நீடித்த இந்த உறவில், வேலு தனது வீட்டை கவனித்துக் கொள்வது போல, மீனாவின் குடும்பத்தையும் கவனித்து வந்தார். அதே நேரத்தில் அவ்வப்போது மீனாவின் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்த வேலு, மதுப்பழக்கத்திற்கு அடிமையான மீனாவின் கணவரான ரேணுவையும் (44), அவரது மகனையும் கண்டித்து வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் இருவரையும் அளவுக்கு அதிகமாக கண்டித்து தாக்குவதால், இருவருக்கும் மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் தந்தை மகன் ஒன்றாக சேர்ந்து, வேலுவை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, வேலு சிப்காட் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நாள்தோறும் பணிக்கு சென்று வருவதை நோட்டமிட்டு, அவரை கொலை செய்வதற்கு சரியான இடத்தை தேர்வு செய்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட வேலு
கொலை செய்யப்பட்ட வேலு 

இந்நிலையில், வேலு இரு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வழக்கம் போல பணியிலிருந்து ரெண்டாடி வழியாக சோளிங்கரில் உள்ள தனது வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தந்தையான ரேணு மற்றும் மகன் மணிகண்டன் இருவரும் ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் வேலுவை வழிமறித்து சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத வேலு ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த நிலையில் சாலை ஓரமாக அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்து கிடப்பது தொடர்பாக சிப்காட் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் நிலைய ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கிருந்த வேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததோடு தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று, பாரதி நகர் மல்லாடி கூட்டுச்சாலையில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த இருவரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததோடு போலீசாரிடமிருந்து தப்பியோட முயற்சித்து உள்ளனர். தொடர்ந்து இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இருவரும் சோளிங்கர் தாலுக்கா செக்கடிகுப்பம் கிராமம் சின்ன தெருவை சேர்ந்த தந்தை மகனான ரேணு (44), மணிகண்டன் (18) என்பதும் இரு தினங்களுக்கு முன்பு வேலுவை திட்டமிட்டு படுகொலை செய்ததும் தெரிய வந்தது.

இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தினர். அப்போது ரேணு, தனது மனைவியான மீனாவுடன் தகாத உறவு வைத்திருந்த வேலு, அவ்வப்போது வீட்டிற்கு வருவதோடு தங்களை அவமானப்படுத்தும் வகையில் ஆபாசமாக பேசியும், தாக்கியும் வந்தார். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்ததால் வேலுவை தனது மகனுடன் சேர்ந்து கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். மேலும், இந்த கொலை திட்டத்தில் ஆந்திராவை சேர்ந்த பார்த்திபன் என்பவர் தங்களுக்கு உதவியாக இருந்ததாகவும் ரேணு தெரிவித்தார்.

கொலை வழக்கில் கைதான ரேணு
கொலை வழக்கில் கைதான ரேணு 

இதனை தொடர்ந்து மூன்று பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த சிப்காட் போலீசார் தந்தை, மகன் இருவரையும் கைது செய்து ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரை தேடி வருகின்றனர்.