சொட்டு மருந்து முகாமிற்கு வந்த குழந்தையை கொஞ்சிய எம்பி சுதா!

போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு வந்த குழந்தையை எம்பி சுதா தூக்கி கொஞ்சிய காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அண்டை நாடுகளில் போலியோ வைரஸ் பரவல் காணப்படுவதால், இந்தியாவின் போலியோ வைரஸ் நிபுணர் ஆலோசனைக் குழு (IEAG) பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு, 21 மாநிலங்களிலுள்ள 269 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடியதாக அடையாளம் கண்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சிவகங்கை, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்கள் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த 6 மாவட்டங்களிலும் இன்று (அக்.12) போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன்மூலம் போலியோ இல்லாத மாநிலம் என்பதை தக்கவைத்து கொள்ளவும், வைரஸ் பரவலிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கவும் இந்த வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டம் காமராஜர் பேருந்து நிலையத்தில், போலியோ சொட்டு மருந்து முகாமை, மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த், எம்.பி சுதா மற்றும் எம்எல்ஏ ராஜகுமார் ஆகியோர் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊற்றித் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, முகாமிற்கு வந்த அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அப்போது, சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வந்த ஒரு குழந்தையை எம்.பி சுதா தூக்கிக் கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் இந்த முகாம்களை சிறப்பாக நடத்திட சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை, வருவாய்த்துறை, சத்துணவு, கல்வி, ரோட்டரி, மகளிர் சுய உதவிக் குழுக்கள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். வயல்களில் குடியிருப்போர், சாலையோர குடியிருப்புகள், செங்கல் கால்வாய் குடியிருப்புகள், கல்குவாரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகிய பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளுக்கு லேசான காய்ச்சல், சளி, இருமல் போன்றவை இருந்தாலும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும். மேலும், வழக்கமாக கொடுக்கப்படும் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும், இம்முகாமில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால் பொதுமக்களும் தங்களது குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் வந்து சொட்டு மருந்து போட்டு செல்கின்றனர். அப்படி முகாமிற்கு வரும் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக சாக்லேட்களும் வழங்கப்பட்டு வருகிறது.