ரஷ்ய அதிபர் புதினுக்கு அளிக்கப்படும் அரசு விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இரண்டு நாட்கள் பயணமாக இந்தியா வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் பிரதமர் மோடியும் புதினை கைகுலுக்கி வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் புதினுக்கு இந்திய முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அங்கிருந்து ராஜ்காட்டிற்கு சென்ற புதின், மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், ராஜ்காட்டில் பார்வையாளர் புத்தகத்தில் புதின் கையெழுத்திட்டார். பின்னர், ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் ரஷ்ய அதிபர் புதினும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்தியக் குடியரசு மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து உறுதி செய்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “அதிபர் புதினை கௌரவிக்கும் வகையில் இன்றிரவு நடைபெறும் அதிகாரப்பூர்வ இரவு விருந்திற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும் அழைக்கப்பட்டுள்ளார்களா என்ற ஊகங்கள் எழுந்தன. இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்களும் அழைக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.