அரசியலை விட்டு விலகத் தயார் - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு
புகழூர் அருகே தடுப்பணை கட்ட திமுக ஆட்சியில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் என முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் தான்தோன்றிமலையில் எம்ஜிஆரின் 109-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில், அதிமுக கரூர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர், "அதிமுகவைப் பார்த்து காப்பியடித்து தான் கடந்த தேர்தலின் போது திமுக தனது அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. வரும் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அரசுப் பேருந்துகளில் ஆண், பெண் என அனைவரும் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம். இது தவிர முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அனைத்து திட்டங்களையும் மீண்டும் நடைமுறைப்படுத்துவோம்.
நீட் தேர்வுக்கு எதிராக திமுக அரசு நாடகம் ஆடி வருகிறது. ஆனால், முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவ, மாணவிகள் பயன் பெறும் வகையில் 7.5% இடஒதுக்கீடை கொண்டு வந்தார். இதன் மூலம் ஆண்டுதோறும் அரசுப் பள்ளிகளில் பயிலும் 600 மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருகின்றனர்" என்றார்.
மேலும், கரூர் மாவட்டத்திற்கு அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட முக்கிய திட்டங்கள் குறித்தும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பட்டியலிட்டார். அப்போது கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டு, அதிமுக ஆட்சி காலத்திலேயே கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது என்றார்.
தொடர்ந்து பேசிய எம்.ஆர். விஜயபாஸ்கர், "தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் நிகழ்ந்த கூட்டநெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கரூருக்கு ஒரு அவப்பெயரை ஏற்படுத்தி விட்டது. இதற்கு உண்மையான காரணம் யார் என்பது மக்களுக்கு தெரியும்.
அதே போல், கரூர் மாவட்டத்தில் காவேரி ஆற்றில் புகழூர் அருகே ரூபாய் 420 கோடியில் ஒரு டிஎம்சி அளவு தண்ணீர் தேக்கும் கதவணையை கட்டுவதற்கு, அதிமுக அரசு நிதி ஒதுக்கீடு செய்து கட்டுமான பணிகளை துவக்கியது. ஆனால் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி திமுக அரசு தான் கதவணை கட்ட நிதி ஒதுக்கீடு செய்ததாக பேசி வருகிறார்.
கதவணை கட்ட திமுக அரசு தான் நிதி ஒதுக்கீடு செய்தது என்று செந்தில் பாலாஜி நிரூபித்தால், தமிழக அரசியலை விட்டு நான் விலகிக் கொள்கிறேன்" என எம்.ஆர். விஜயபாஸ்கர் சவால் விடுத்தார்.