அரசியலில் இருந்து விலகுகிறேன்... கண்ணீர் உடன் தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமசந்திரன்

அரசியலில் இருந்து விலகுகிறேன்... கண்ணீர் உடன் தெரிவித்த ஓபிஎஸ் ஆதரவாளர் குன்னம் ராமசந்திரன்
திமுகவில் இணைய போவதில்லை அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் குன்னம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஆர்.டி.ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கண்ணீருடன் தெரிவித்தார்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக ஓபிஎஸ் அணி தொண்டர் உரிமை மீட்பு குழுவின் அம்மா பேரவை மாநில செயலாளர் செயலாளருமாக செயல்பட்டு வந்த ஆர்.டி.ராமச்சந்திரன் நேற்று மாலை, தனது அரசியல் ஆசான் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து வருகின்ற 26 ஆம் தேதி தானும் அதில் திமுகவில் இணைய போவதாக, செய்யாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டும், குடும்ப உறுப்பினர்களின் அறிவுரையின்படியும் பொது வாழ்க்கையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளப் போவதாகவும். தனது வளர்ப்பு தாயான ஜெயலலிதாவின் புகைப்படத்தை தனது அலுவலகத்திலிருந்து எடுக்க முடியாது என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். இதில், ஓபிஎஸ் ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த வைத்திலிங்கம், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம், “ஓ. பன்னீர்செல்வத்தை விட்டு விலகி வருவதற்கு, தேர்தல் வர இருக்கிறது, முடிவு சீக்கிரம் எடுக்க வேண்டும், காலதாமதம் ஆகிறது. எனவே விலகி வந்தேன். ஓபிஎஸ்-க்கு ஆலோசனை சொல்லும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. அண்ணன் நல்ல முடிவு எடுப்பார்” என்று தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிதக்கது.