இன்று அதிகாலை கரையை கடந்தது மோந்தா புயல்! ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கடும் பாதிப்பு!
இன்று (அக்.29) அதிகாலையில் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே ‘மோந்தா’ புயல் கரையை கடந்தது. இந்த புயலால் ஆந்திராவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கக்கடலின் தென்மேற்கு - தென்கிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.26) அன்று ‘மோந்தா’ புயல் உருவானது. இந்த புயலானது தமிழ்நாடு - ஆந்திராவை நோக்கி மணிக்கு 17 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், அதி தீவிர புயலாக வலுபெற்றது.
இந்த புயலானது நேற்று (அக்.28) இரவு 7 மணியளவில் கரையை கடக்க தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை 2.30 மணியளவில் கடுமையான சூறாவளியிலிருந்து வலுவிழந்து, சூறாவளி புயலாக மாறியது. சுமார் 10 கி.மீ வேகத்தில் கிட்டத்தட்ட வடவேற்கு நோக்கி நகர்ந்த இந்த புயலானது ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
புயல் கரையை கடந்தபோது மணிக்கு 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் கிருஷ்ணா, மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 6 மணி நேரத்திற்கு பலத்த காற்றுடன் கூடிய அதி கனமழை கொட்டித் தீர்த்தது.
இதன் காரணமாக ஆந்திராவில் பல இடங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கோனசீமா மாவட்டத்தில் உள்ள மகானகுடேன் என்ற கிராமத்தில், சூறாவளி காற்றால் பனை மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததில் ஒரு பெண் மரணமடைந்தார். மேலும் இந்த சூறாவளி காற்றால் ஏற்பட்ட இடர்பாடுகளில் சிக்கி சிலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளி காற்றின் தாக்கத்தால் ஆந்திராவில் சுமார் 38 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமாகின. மேலும், 1.38 லட்சம் ஹெக்டேட் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் நாசமாகியுள்ளன.
புயலின் தாக்கம் காரணமாக, நெல்லூர் மாவட்டத்தின் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசித்துவந்த கிட்டத்தட்ட 76 ஆயிரம் பேர் முன்கூட்டியே முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதுபோக, ஆந்திர அரசு சார்பில் 219 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததோடு, 865 டன் கால்நடை தீவனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் புயலால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணா, ஏலூரு மற்றும் காக்கிநாடா உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு 8.30 மணிமுதல் இன்று காலை 6 மணிவரை அவசர மருத்துவ சேவைகளில் தவிர, சாலைகளில் போக்குவரத்துக்கு அரசு தடை விதித்திருந்தது.
மோந்தா புயலால் ஆந்திரா மட்டுமல்லாமல் ஒடிசாவின் கடலோர மற்றும் தெற்கு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால் அங்கு மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, நிலச்சரிவுகள் ஏற்பட்டு, வீடுகளும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.