அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! காலியான 5 தொகுதிகள்

அடுத்தடுத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா! காலியான 5 தொகுதிகள்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை தொடங்கினார். இதில், ஓபிஎஸ் ஆதரவாக இருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். சட்டமன்ற செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த வைத்திலிங்கம், தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற வைத்திலிங்கம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து ஒரத்தநாடு தொகுதி தற்போது காலியாகியுள்ளது.
இதேபோல், முன்னதாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட செங்கோட்டையன், தனது கோபிசெட்டிப்பாளையம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக தலைவர் விஜய் முன்னிலையில், அவரது கட்சியில் இணைந்தார்.
இதேபோல், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருந்துவந்த மனோஜ் பாண்டியன் தனது ஆலங்குளம் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் இணைந்தார்.
மேலும், வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த அமுல் கந்தசாமி கடந்த ஆண்டு ஜூன் மாதம் காலமானார். அதேபோல், சேந்தமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ. பொன்னுசாமியும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார்.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில் தற்போது மொத்தம் 5 தொகுதிகள் காலியாகியுள்ளன. பொதுவாக எம்.எல்.ஏ. தனது பதவியை ராஜினாமா செய்தாலும், அல்லது காலமானாலோ அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்படும். ஆனால், சட்டமன்றத் தேர்தலுக்கு 6 மாதங்கள் மட்டுமே இருந்தால் இடைத் தேர்தல் அறிவிக்கப்படமாட்டாது. தற்போது இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இடைத் தேர்தல் அறிவிக்கப்படாது.