விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு தினம்: உதயநதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் அஞ்சலி
தேமுதிக முன்னாள் பொதுச் செயலாளர் விஜயகாந்தின் 2 ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்நாட்டின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக பொதுச்செயலாளருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், விஜயகாந்தின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது நினைவு நாளினை குருபூஜையாக தேமுதிக கடைபிடித்து வருகிறது.
அந்த வகையில், இதேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நேற்று அமைதி பேரணி நடைபெற்றது. தொடர்ந்து, 'கேப்டன் ஆலயம்' நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள், தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜயகாந்த் நினைவிடத்தில் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘கருணாநிதி மீது பெருமதிப்பு கொண்டவர், முதலமைச்சரின் இனிய நண்பர், எனது பாசத்திற்குரிய அண்ணன் கேப்டன் விஜயகாந்த், தனது அன்பால் அனைவரையும் ஈர்த்து, திரையில் மட்டுமல்லாது மக்கள் மனதிலும் நாயகனாக திகழ்ந்து, மறைந்தாலும் உணர்வால் நம்முடன் வாழும் அவரின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில், ‘வானத்தைப் போல மனம் படைத்து’, ’இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற கோட்பாட்டோடு வாழ்ந்த ’பத்ம பூஷன்’ அன்பு சகோதரர் விஜயகாந்த் கலைத் துறையிலும், பொது வாழ்விலும் சாதனை புரிந்தார்’ என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பாஜக சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். அதேபோல், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது ஆதரவாளர்களுடன் வந்து நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அத்துடன் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், துணை நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இதனால் விஜயகாந்தின் நினைவிடத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், ‘ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் விஜயகாந்த் அவர்களின் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.