அரசு பேருந்துப் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் - தட்டிக் கேட்ட நடத்துனருக்கு அடி உதை
அரசுப் பேருந்தில் படிக்கெட்டில் தொங்கிக் கொண்டு சாலையில் கால்களை தேய்த்தபடி பயணம் செய்த மாணவர்கள், இந்த செயலை தட்டிக் கேட்ட நடத்துனரை, மதுபோதையில் வந்த இளைஞர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து பண்ருட்டி சென்ற அரசுப் பேருந்தில் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு சில மாணவர்கள் பயணித்துள்ளனர். அவர்கள் பேருந்துக்குள் இருந்த பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், ஆபத்தான முறையில் கால்களை தரையில் தேய்த்தபடியும் பயணித்துள்ளனர். இதனைப் பார்த்த நடத்துனர் மதன் மாணவர்களை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள், செல்போன் மூலம் தங்களது நண்பர்களை, பண்ருட்டிக்கு வரவழைத்ததாக தெரிகிறது. பேருந்து பண்ருட்டிக்கு வந்ததும், அங்கு மதுபோதையில் காத்திருந்த இளைஞர்கள் நடத்துனர் மதனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் நடத்துனர் மதனை தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மதனை மீட்ட பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், நடத்துனரை தாக்கியவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கும் போது இது போன்ற செயல்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மாணவர்களிடையே ரீல்ஸ் மோகம் அதிகமாக இருப்பதால், படிகளில் தொங்கியபடி ரீல்ஸ் எடுப்பது, ஓடும் பேருந்தில் ஏறுவது, இறங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் அவற்றை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களிலும் பதிவிடுகின்றனர்.
இது போன்ற செயல்களால் படிகளில் தடுக்கி விழுந்து மாணவர்களுக்கு அடிபடுவது, பேருந்து டயர்களில் சிக்கி உயிரிழப்பது போன்ற சம்பவங்களும் அவ்வபோது நடக்கின்றன.
சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற மாணவர்கள் மோதல்கள் மற்றும் மாணவர்கள் - பொதுமக்கள் மோதல்களை தடுக்க, கல்லூரி மற்றும் பள்ளிகளின் அருகேயும், முக்கிய போக்குவரத்து பகுதிகளிலும் பள்ளி, கல்லூரி முடியும் நேரங்களில் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இருப்பினும், மாணவர்களின் இது போன்ற செயல்பாடுகள் குறைந்தபாடில்லை என்று பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.