ஸ்டாலினா, விஜயா..? யார் தளபதி என்ற கேள்விக்கு சட்டென பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த்
நாட்டுக்காக எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதிகள் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்களில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாநிலம் முழுவதும் 'உள்ளம் தேடி - இல்லம் நாடி' சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேலும் அவர், தமிழ்நாட்டில் இம்முறை கூட்டணி ஆட்சி அமைவதற்கு அதிக சாத்தியங்கள் உள்ளன என்றும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல், இதுவரை தமிழக அரசியலில் நாம் பார்த்திராத தேர்தலாக அமையும் என கூறி வருகிறார்.
இந்த நிலையில், திருப்பூரில் நடந்த தேமுதிகவின் வாக்குச்சாவடி முகவர் ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.
அதனை தொடந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''ஜனவரி 9ல் நடைபெற உள்ள கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்த அறிவிப்பு இருக்கும். கட்சியை பலப்படுத்தி மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம்.
எங்களுக்கு செல்லும் இடமெல்லாம் மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது. ''ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு'' என்பது 2026ல் அமையும். வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய வகையில் கூட்டணி ஆட்சி அமையவே 100 சதவீத வாய்ப்பு உள்ளது.
ரேஷன் கடையில் தரமில்லாத அரிசி தான் வழங்கப்படுகிறது. இந்த ஆட்சிக்கு 50/50 என மதிப்பெண் கொடுத்துள்ளேன். வரும் தேர்தலில் கூட்டணி மந்திரி சபை அமைந்து தான் ஆட்சி அமையும் என எங்களுக்கு வரும் தகவலாக உள்ளது. வடமாநில மக்கள் அதிக அளவில் திருப்பூரில் உள்ளனர். அதனால் இங்குள்ளவர்கள் வாக்கை எடுத்து விட்டு புதிதாக வந்தவர்களுக்கு வாக்கு வழங்குவது என்பதை தேமுதிக எதிர்க்கிறது. எங்கு பிறந்தார்களோ, அங்கு தான் அவர்களுக்கு வாக்கு இருக்க வேண்டும்.'' என்ற அவரிடம், '' செங்கோட்டையன், தவெக, அதிமுக உட்கட்சி குறித்த கேள்விகளுக்கு, ''நோ கமெண்ட்ஸ்'' என்று பதிலளித்தார்.
ஸ்டாலினா?, விஜயா? யார் தளபதி என்ற கேள்விக்கு, '' நாட்டுக்காக எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள் தான் உண்மையான இந்தியாவின் தளபதி.'' என்று கூறினார்.