மலையில் பதுங்கி போலீசுக்கு தண்ணி காட்டி வந்த ரவுடி... திருச்சியில் பிடித்து சிறையில் தள்ளிய தனிப்படை
90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி தலைமறைவாக இருந்து வந்த ரவுடி பாலமுருகனை திருச்சியில் வைத்து தென்காசி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (30). இவர் மீது நெல்லை, தென்காசி உட்பட தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உட்பட 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. குறிப்பாக சொந்த ஊரான கடையம் காவல் நிலையத்தில் மட்டும் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பாலமுருகன் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து திருச்சூர் சிறையில் இருந்த பாலமுருகனை கடந்த நவம்பர் மாதம் அருப்புக்கோட்டை போலீசார் மற்றொரு வழக்குக்காக அழைத்துச் சென்று, விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் திருச்சூர் சிறைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறை வளாகத்தில் இருந்து பாலமுருகன் தப்பிச் சென்றார். இதையடுத்து பாலமுருகனை பல்வேறு பகுதிகளில் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊரான கடையம் ராமநதி அணை அருகே மலைப்பொத்தை பகுதியில் பாலமுருகன் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் மலையில் ஏறி தேட முயன்றனர். அப்போது போலீசார் மலையில் சிக்கி தவித்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் தப்பிச்சென்று சங்கரன்கோவில் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கடந்த வாரம் பதுங்கியிருந்தார்.
அங்கும் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் அவரை பிடிக்க முடியவில்லை. இந்நிலையில் பாலமுருகன் திருச்சியில் பதுங்கி இருப்பதாக தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்த தனிப்படையினர் திருச்சியில் பதுங்கியிருந்த ரவுடி பாலமுருகனை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து இரவோடு இரவாக பாலமுருகனை தென்காசிக்கு கொண்டு வந்த காவல்துறையினர் தென்காசி நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.