திமுகவா? தவெகவா? ராகுலுடனான ஆலோசனைக்கு பிறகு செல்வப்பெருந்தகை பேட்டி
கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க கூடாது என காங்கிரஸ் தலைமை அறிவுத்தியுள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொடங்கியுள்ளன. தேர்தல் வியூகம், கூட்டணி தொடர்பாக இரண்டு கட்சிகளும் தொடர் ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக கூட்டணியில் பாஜக, தமாக, பாமக என மற்றொரு அணியாகவும் தேர்தலை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் இந்த முறை அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு உள்ளிட்ட நிபந்தனைகளை விதிப்பதாக தகவல் வெளியானது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என்பது எப்போதும் இருந்ததில்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்த நிலையில், அது அவருடைய கருத்து என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். இதனால், கூட்டணி ஆட்சி வேண்டும் என்ற கருத்தில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதை போன்ற சூழல் நிலவி வந்த நிலையில், ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, ப.சிதம்பரம், கே.சி.வேணுகோபால், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மற்றும் எம்.பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நிர்வாகிகளிடம் கூட்டணி தொடர்பாக ராகுல் கருத்து கேட்டதாக தகவல் வெளியானது. கூட்டத்தில் தவெக கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் சிலர் தங்களின் கருத்தை ராகுலிடம் எடுத்துரைத்ததாகவும் கூறப்படுகிறது. ராகுல் கூட்டணி விவகாரத்தில் எடுக்கப்போகும் முடிவை பொறுத்தே தமிழக அரசியலில் கூட்டணிகள் இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக ஓரிரு நாளில் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்வப்பெருந்தகை, "தமிழக சட்டப்பேரவை கூட்டணி தொடர்பாக நிர்வாகிகள் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. எனவே நிர்வாகிகள் அதை பின்பற்ற வேண்டும். கூட்டணி தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்போம்" என தெரிவித்தார்.
இதனிடையே திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்குள் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்பான நிலைபாடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.