“இயற்கைக்கு முரணானது பாஜக கூட்டணி” - செல்வப்பெருந்தகை தாக்கு
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் இணைந்திருப்பது இயற்கைக்கு முரணானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
நந்தனத்தில் நடைபெற்று வந்த புத்தகக் காட்சிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வருகை தந்து பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இப்போது அவர் எப்படி பழனிசாமியுடன் சேர்ந்து அரசியல் செய்ய போகிறார்... மேடை ஏறி வாக்கு கேட்கப் போகிறார்? ஒருபோதும் தமிழக மக்கள் இந்தக் கூட்டணியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மும்மொழிக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சேர வேண்டிய நிதியைத் தருவோம் என்று அடம்பிடிக்கிறது மத்திய பாஜக அரசு. தமிழக மக்களை மண்டியிட வைக்கத் துடிக்கிறது. அப்படிப்பட்ட பாஜக, மக்கள் விவரமில்லாமல் வாக்களிப்பார்கள் என மிகப்பெரும் பேராசையுடன் படையெடுக்கிறது.
எவ்வளவு பேரைச் சேர்த்தாலும் இந்தக் கூட்டணி தமிழக மக்களால் நிராகரிக்கப்படும். இது மூழ்கும் கப்பல். இதில் யார் யாரெல்லாம் ஏறுகிறார்களோ அவர்களும் சேர்ந்து மூழ்குவார்கள். பிரதமர் மோடி தமிழகத்துக்கு ஒரு முறை அல்ல, நூறு முறை வந்தாலும் தமிழக மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுக - காங்கிரஸ் கூட்டணி தேர்தல் வரைக்கும் கூட நீடிக்காது என்கிறார் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன். அவர் பொறுத்திருந்து பார்க்கட்டும். இவ்வாறு அவர் கூறினார்.