அனல் பறக்கும் மேற்கு வங்க தேர்தல்: ஒரே வீட்டில் வசிக்கும் மோடி - மம்தா!

அனல் பறக்கும் மேற்கு வங்க தேர்தல்: ஒரே வீட்டில் வசிக்கும் மோடி - மம்தா!

 உச்சக்கட்ட தேர்தல் பரபரப்பு நிலவி வரும் மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான அப்டேட் கிடைத்துள்ளது. ஆம், அங்கு ஒரே வீட்டில் மோடியும், மம்தாவும் வசித்து வருகிறார்கள் என்பதுதான் அது. என்ன.. படித்ததும் தலை கிறுகிறு என சுற்றுகிறதா? நமக்கும் அப்படித்தான் இருந்தது. சரி, என்ன நடந்தது? பார்ப்போம்.

தமிழ்நாட்டை போலவே மேற்கு வங்கத்திலும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜியின் ஆளும் திரிணமூல் காங்கிரஸும் - பாஜகவும் நேரடியாக மோதிக் கொள்கின்றன.

ஒருகாலத்தில், மேற்கு வங்கத்தில் சுவடே இல்லாமல் இருந்த பாஜக, அங்கு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. இது மம்தாவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த முறை மீண்டும் ஆட்சியை தக்க வைக்க மம்தாவும், எப்படியாவது அரியணையை பிடித்துவிட பாஜகவும் கடுமையாக சண்டையிட்டு வருகின்றன.

பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் அங்கு தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். இப்படியொரு சூழலில், ஒரே வீட்டில் மோடியும், மம்தாவும் இருக்கிறார்கள் என்ற தகவல் வந்தால் நமக்கு எப்படி இருக்கும்?

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையின் (SIR) போதுதான் இப்படியொரு தகவல் வெளியானது. என்னவென்று பார்த்தால், அங்குள்ள துப்ராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பம் பகுதியைச் சேர்ந்த அண்ணன் - தங்கைதான் அவர்கள். அண்ணன் பெயர் நரேந்திர குமார் மோடி. பிரதமரின் பெயர் நரேந்திர தாமோதர் தாஸ் மோடி. தங்கை பெயர் மம்தா அகர்வால். நல்ல வேளை, பானர்ஜி இல்லை.

நரேந்திர குமார் மோடி பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார். ராஜஸ்தானை பூர்வீகமாக கொண்ட இவர்களின் குடும்பம், பல தலைமுறைகளுக்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு குடிபெயர்ந்தது. அதன் பின்னர், அவர்கள் மேற்கு வங்கத்தையே சொந்த மாநிலமாக ஆக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து நரேந்திர மோடி கூறுகையில், "பிரதமராக மோடி பதவியேற்பதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பே எனக்கு எனது மாமா நரேந்திர மோடி என பெயர் சூட்டிவிட்டார். எங்கள் பகுதிவாசிகள் என்னை 'முன்னா' என அழைப்பார்கள். ஆனால், எனது பணி ரீதியாக எனது முழுப்பெயரைதான் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனது பெயரை சொல்லும்போது, என்னை அனைவரும் சில நொடிகள் கண் இமைக்காமல் பார்ப்பார்கள்.

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச்சாவடிக்கு செல்லும் போதெல்லாம், என் பெயரை கேட்டதும், தேர்தல் அலுவலர்கள் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு என்னை உற்று பார்ப்பார்கள். அடுத்ததாக எனது தங்கை பெயரை (மம்தா) கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்து விடுவார்கள்.

பெயரில் எப்படியோ, எனக்கும் - எனது தங்கைக்கும் உள்ள உறவும் அப்படித்தான். நானும், எனது தங்கையும் எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்து கொண்டிருப்போம். ஆனால், ஒருவர் இல்லாமல் இன்னொருவரால் இருக்க முடியாது. அப்படி பல ஒற்றுமைகள் இருக்கின்றன" என சிரித்தபடியே கூறுகிறார் நரேந்திர மோடி. மன்னிக்கவும்; நரேந்திர குமார் மோடி.