தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி: முதல் பேச்சிலேயே திமுகவை 'டார்கெட்' செய்த நிதின் நபின்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி: முதல் பேச்சிலேயே திமுகவை 'டார்கெட்' செய்த நிதின் நபின்

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வென்று ஆட்சி அமைக்கும் என பாஜக தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நபின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாஜகவின் 12-வது தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதின் நபின், இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில பாஜக முதல்வர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து டெல்லி பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் முன் உரையாற்றிய நிதின் நபின், தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை தலைவராக தேர்ந்தெடுத்த பாஜக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "இன்றைய நாள் என் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நாளாகும். ஒரு கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்கிறேன் என்று இதை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது. மாறாக ஒரு கட்சியின் சித்தாந்தம், மரபுகளை காத்து வழி நடத்த வேண்டிய முக்கிய பொறுப்பை ஏற்பதாகவே நான் கருதுகிறேன். இந்த நேரத்தில் கட்சியில் உள்ள அனைத்து மூத்த தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டியது எனது கடமை. 140 கோடி இந்தியர்களின் கனவான 'வளர்ந்த இந்தியா' என்ற இலக்கை எட்ட நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல அவர் அயராமல் உழைத்து வருகிறார். இதற்காக பிரதமருக்கு மீண்டும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

பிரமருடன் முதல் சந்திப்பு

தொடர்ந்து பேசிய நதின் நபின், "பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் பிரதமரை நேரில் சந்தித்து பேசிய அந்த நிகழ்வு தற்போதும் என் நினைவுக்கு வருகிறது. மக்களின் உணர்வுகளுடன் இணைவதன் மூலமே உண்மையான மகத்துவம் வருகிறது என்பதை அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். ஒரு சாதாரண தொண்டனாக இருந்த எனக்கு இந்த பெரிய பொறுப்பை பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

பிரதமர் மோடி நாட்டுக்கு எவ்வாறு சேவையாற்றி வருகிறார் என்பதை நேரில் காணும் பாக்கியம் பெற்றவன் என்ற அடிப்படையில், இந்த கட்சிக்கு என்னாலான அனைத்தையும் செய்வேன். நாட்டு மக்களுக்கு ஆற்றும் சேவையை வரமாக செய்ய வேண்டும் என்பதை பிரதமரிடம் இத்தனை ஆண்டு காலத்தில் நான் அதிகம் கற்றுள்ளேன். அதை சிறப்பாக செய்வேன் என்ற உறுதியை அவருக்கு வழங்குகிறேன்" என்றார்.

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி

தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக பேசிய அவர், "வெகு விரைவில் தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தொண்டர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் ஐந்து மாநிலங்களிலும் பாஜகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வார்கள் என்பதில் நாங்கள் முழு நம்பிக்கை கொண்டுள்ளோம். அனைத்து மாநிலங்களிலும் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும்.

தமிழ்நாட்டில் கலாச்சாரம் மற்றும் மத மரபுகளில் எதிர்க்கட்சிகள் தலையிட முயற்சிக்கின்றன. தங்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கினார் என்பதற்காக நீதிபதியையே பதவி நீக்க செய்ய முயல்கிறார்கள். இது போன்ற மரபுகளுக்கு எதிராக செயல்படுகின்ற சக்திகளை எதிர்த்து வெற்றி பெற வேண்டிய தேவை உள்ளது.

சமீபத்தில் ஒரு மலையில் ஏற்ற இருந்த கார்த்திகை தீபத்தை எப்படியெல்லாம் தடுத்து நிறுத்தினார்கள் என்று பார்த்தோம். ராமர் பாலம் இருப்பதை ஏற்க மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.