திமுகவிற்கு அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையோ? தலைமைச் செயலக சங்கம் கேள்வி!

திமுகவிற்கு அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையோ? தலைமைச் செயலக சங்கம் கேள்வி!

 திமுகவிற்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாக்கு தேவையில்லையோ என்று தோன்றுவதாக தமிழ்நாடு அரசு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

பழைய ஓய்வூதியம் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும், அகவிலைப்படி உயர்த்தப்படும் என்பன உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஜாக்டோ ஜியோ அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இதுபோன்ற போராட்டம் இந்த அரசுக்கு பாதகமாக அமையும் என்று தமிழக அரசு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

நாடகம் நடத்துகின்றனர்

இதுகுறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அவர் பிரக்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர், "இந்திய தணிக்கைத் துறையின் அறிக்கையை கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் வைத்துள்ளனர். இது ஒவ்வொரு ஆண்டும் வைக்கக்கூடிய அறிக்கைதான். அதில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை எல்ஐசியில் முதலீடு செய்துள்ளனர். ஓய்வூதியம் கொடுப்பதற்கான தீர்வினை செய்யாமல் உள்ளனர். இது அதிமுக ஆட்சியின் போதும் இருந்தது.

அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்குவோம் என வாக்குறுதி அளித்தனர். ஆனால் வழங்காமல், அதற்காக ஒரு குழுவை அமைத்து அந்த குழுவும் கால நீடிப்பு எனக் கேட்காமல், இடைக்கால அறிக்கை என்ற நாடகத்தை நடத்தியுள்ளது. திமுக அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை வழங்காமல் செல்லும் நிலையைத் தான் பார்க்க முடிகிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், ஓய்வூதியம் மற்றும் ஒய்வுகாலப் பலன்கள் என்ற கொள்கை விளக்கக் குறிப்பில், அரசு ஊழியர்களின் பணம் 84 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கிறது என்று மார்ச் மாதத்தில் கூறினர். தற்போது 90 ஆயிரம் கோடி ரூபாய் இருக்கும். அதனை பொது நலத்திட்டங்களுக்கோ, மக்கள் நலத் திட்டங்களுக்கோ செலவிடாமல் முடக்கி வைத்துள்ளது என்பது நிதி மேலாண்மைக்கு எதிரான செயல். 5 ஆண்டுகள் ஆகியும் ஓய்வூதியம் வழங்குவதற்கான தீர்வை நோக்கிச் செல்லாமலும், பணத்தை செலவிடாமல் வைத்துள்ளதும் முறையற்ற செயல்.

அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லையா?

ஓய்வூதியம் அளிப்பதற்கு குழு அமைத்த உடனேயும், இடைக்கால அறிக்கை அளித்தபோதும் தலைமைச் செயலக சங்கத்தினர் உடனடியாக கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், நாங்கள் செய்வதைத் தான் செய்வோம் என அரசு நினைக்கிறது. முக்கியமாக, தேர்தல் வரும் ஆண்டிலும் கூட திமுக அலட்சியப்போக்குடன் செயல்படுகிறது. அதேபோல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் கூட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை.

அதிமுக அரசு ஊழியர்களின் வாக்கு தேவையில்லை என்ற நிலையில் தான் உள்ளனர். அதேபோல, திமுகவும் அதை நோக்கி செல்கிறதோ? என்று எண்ண தோன்றுகிறது. எதுவாயினும் 2026 சட்டமன்றத் தேர்தல் இதற்கான தீர்வை அளிக்கும். ‘நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செய்வோம்’ என கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. நடப்பு நிதியாண்டிலேயே பழைய ஓய்வூதிய திட்டத்தை திமுக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போது தான் அரசு ஊழியர்களுக்கு நம்பிக்கை வரும். காலம் தாழ்த்தி எடுக்கும் நடவடிக்கை பலனளிக்காது,” என்றார்.

கழுத்தில் கத்தி வைப்பது போல உள்ளது

மேலும் பேசிய அவர், “தணிக்கைத் துறையின் குறைகளை அரசுதான் நிவர்த்தி செய்ய வேண்டும். ஆனால், ஓய்வு பெறுபவர்களுக்கு ‘எந்த காலத்திலும் ஓய்வூதியம் கேட்கமாட்டேன்’ என்ற உறுதிமொழியுடன், கழுத்தில் கத்தி வைப்பது போன்று.. பணத்தை வழங்கி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு எப்போது தான் விடியலை நோக்கிச் செல்வார்கள் என்பது தெரியாமல் உள்ளது.

இப்படி இருந்தால் சமூக நீதி எப்படி வரும்?

அதேபோல, அரசுத் துறைகளில் மூன்றில் ஒரு பங்கு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதற்கான வேலையையும் நாங்கள் தான் செய்கிறோம். இந்த அரசு தனியார் மயத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கையை புறந்தள்ளி விட்டு, அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்களை நியமனம் செய்து வருகின்றனர். இந்த கேவலமான, அவலமான நிலைகுறித்து முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரிடமும் எடுத்துக் கூறியுள்ளோம். குரூப்-4 நிலையில் உள்ள பணியாளர்களை நிரந்தரமாக நியமனம் செய்தால் மட்டுமே சமூக நீதி என்பது வரும். அந்த குடும்பத்திலிருந்து அடுத்த தலைமுறை நல்ல நிலைக்கு வரும். தற்போது, அடுத்த தலைமுறை வளர்ச்சி என்பதை மறுக்கக் கூடிய சூழல் தான் நிலவுகிறது.

போராட்டத்திற்கு தள்ளும் அரசு

ஒன்றிய அரசு எப்போது அகவிலைப்படி கொடுத்தாலும், தமிழ்நாடு அரசு கொடுக்கும் என கொள்கை முடிவாக தெரிவித்தனர். ஆனால், ஒன்றிய அரசு கொடுத்து 4 மாதம் கடந்தும் மாநில அரசு இதனை கொடுக்கவில்லை. அரசின் திட்டங்களை செயல்படுத்தும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு எதையும் செய்ய முடியாது. ஆகையால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

அகவிலைப்படியை விட பழைய ஓய்வூதிய திட்டத்தினை டிசம்பர் மாதத்திற்குள் அறிவித்து, இந்த நிதியாண்டிலேயே அசனை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில், 2026ஆம் ஆண்டு தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்கான நிலைபாட்டை ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் எடுப்பார்கள்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை பெறுவதற்காக ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் இணைந்து, நவம்பர் 18ஆம் தேதி ‘ஒரு நாள் அடையாஷ வேலைநிறுத்தம்’ செய்ய உள்ளோம். வேலைநிறுத்தம் வரை செல்லவிடுவார்களா? என்பதை அரசுதான் முடிவெடுக்க வேண்டும். அதன் பின்னர் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை, மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் திட்டமிட்டு முன்னெடுப்போம். இந்த அரசு தான் எங்களை போராட்டத்திற்குத் தள்ளுகிறது” என்று வெங்கடேசன் தெரிவித்தார்.