பாசிஸ்டுகளின் பிரித்தாளும் சூழ்ச்சி மக்களால் வீழ்த்தப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் எண்ணம் தமிழக மக்களால் வீழ்த்தப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை பழங்காநத்தம் அருகே பெந்தேகோஸ்தே சபைகளின் மாமன்றம் (Pentecostal Churches' General Assembly) சார்பில் கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் அன்பில் மகேஸ் மற்றும் மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் மேடையில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “கிறிஸ்தவ சகோதர, சகோதரிகள் என் மீது தனி பாசம், அன்பு வைத்துள்ளனர். இயேசுவின் பிறந்த நாளை மட்டும் கொண்டாடாமல், அவரது கருத்துக்களையும் நாம் கொண்டாட வேண்டும். கிறிஸ்தவ கொள்கைகளுக்கும், திராவிட கொள்கைகளுக்கும் வேறுபாடு இல்லை. இரண்டுமே மனிதநேயம், அன்பு மற்றும் சமத்துவத்தை மட்டுமே போதிக்கின்றன.
மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில் தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தவர்களும் மக்கள் தலைவர்களாக உயர முடியும் என்பதை நிரூபித்து காட்டிய இயக்கம் திமுக. அதே போல், மற்றவர்கள் மீது இரக்கம் காட்ட வேண்டும் என்பதையும் திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், நாட்டை ஆளும் மத்தியில் உள்ளவர்களுக்கு இரக்க குணத்திற்கு பதிலாக, தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மீது வெறுப்பு உணர்வு அதிகமாக உள்ளது. அதை விட மத்திய அரசுக்கு எங்கே தமிழ்நாடு மக்கள் ஒன்று சேர்ந்து நம்மை எதிர்த்துவிடுவார்களோ? என்ற பயம் உள்ளது. இதனால், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். என்ன தான் முயற்சி செய்தாலும் தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எடுபடாது.
தமிழகம் தனித்துவமான மாநிலம். மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்டி, கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் பாசிஸ்ட்டுகளின் நினைப்பு தமிழ் மக்களால் வீழ்த்தப்படும். பகிந்து கொடுக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை. பாசிஸ்ட்டுகளின் கொடுமைகளை தாங்கிக் கொண்டு, தமிழ்நாட்டின் தனித்தன்மையை, மதச்சார்பின்மையை திமுக நிச்சயம் காப்பாற்றும்.
திமுகவிற்கும் - சிறுபான்மை மக்களுக்கும் இடையே உள்ள உறவு கொள்கை உறவு. அதனை யாராலும் பிரிக்க முடியாது. கடந்த 4 ஆண்டு திமுக ஆட்சியில் சிறுபான்மையின மாணவர்களுக்கு ரூ.7 கோடி அளவில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.