திருமணத்தை மீறிய உறவால் வெல்டிங் ஊழியர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் தாலுகாவிற்கு உட்பட்ட செக்கடிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் 44 வயதான வேலு. இவர் சிப்காட் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். என்னதான் மனைவி என்று ஒருவர் இருந்தாலும் துனைவி என்று ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் தான் வாழ்க்கை நிறைவடையும் என நினைத்த வேலு, அதே பகுதியைச் சேர்ந்த மீனா என்பவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் மீனாவுக்கோ ஏற்கெனவே கணவன் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இருவருக்கும் குடும்பம் இருந்தபோதும் திருமணத்தை மீறிய உறவில் இருந்து வந்துள்ளனர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான மீனாவின் கணவர் ரேணு குடும்பத்தை சரியாக கவனித்துக் கொள்வதில்லை. ஆனால் தகாத உறவில் இருந்த வேலுவோ தனது வீட்டை கவனித்துக் கொள்வது போல மீனாவின் குடும்பத்தையும் நல்லவிதமாக கவனித்து வந்ததாக தெரிகிறது. அதே நேரத்தில் அவ்வப்போது மீனாவின் வீட்டில் தங்குவதையும் வழக்கமாக வைத்திருந்தார் வேலு.
என்னதான் மதுப்பழக்கத்திற்கு ஆளாகி குடும்பத்தை கவனிக்காமல் சுற்றி வந்தாலும் ரேணுவுக்கும் மனதின் ஒரு ஓரத்தில் ஆத்திரம் கொப்பளித்துக் கொண்டுதான் இருந்துள்ளது. என்றைக்காவது ஒரு நாள் உன்னை தீர்த்துக் கட்டுகிறேன் பார் என அடி மனதிற்குள் கருவிக் கொண்டுதான் இருந்தார் ரேணு. அதேபோல் மீனாவின் மகனுக்கும் தாயின் நடவடிக்கைகள் சுத்தமாக பிடிக்கவில்லை. அவரும் வேலுவை எப்போது தீர்த்துக் கட்டலாம் எனக் காத்திருந்தார். இந்த சூழலில், வேலு அடிக்கடி வீட்டிற்கு வருவதுடன் கணவன் ரேணுவையும், அவரது மகனையும் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்திக் கொண்டிருந்தார்.
இது அவர்களது ஆத்திரத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. இனி பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்த இருவரும், வேலுவை போட்டுத் தள்ள நாள் குறித்தனர். அதன்படி, வேலு சிப்காட் நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு நாள்தோறும் பணிக்கு சென்று வருவதை நோட்டமிட்டனர். அவரை கொலை செய்வதற்கு சரியான இடத்தையும் தேர்வு செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு மாலை நேரத்தில் வழக்கம் போல பணியிலிருந்து ரெண்டாடி வழியாக சோளிங்கரில் உள்ள தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார் வேலு.
அப்போது அவரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் ரேணுவும் அவரது மகனும் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். சரியாக இரண்டாடி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதி வழியாக சென்றபோது, திடீரென அவரை வழிமறித்த இருவரும் பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டித் தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத வேலு நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த சிப்காட் போலீசார் சடலத்தைக் கைப்பற்றி தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் வேலுவின் திருமணத்தை மீறிய உறவு போலீசாருக்குத் தெரியவந்த நிலையில், அவர்களின் சந்தேகம் ரேணுவின் மீது விழுந்தது. ரேணுவைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் உண்மைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் கக்கி விட்டார். தந்தை, மகன் இருவரையும் கைது செய்த போலீசாருக்கு இந்த கொலையில் இவர்களுக்கு மூன்றாவதாக பார்த்திபன் என்ற நபரும் உதவியிருக்கிறார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தலைமறைவாக உள்ள வெப்பன் சப்ளையர் பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர். திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட முன்விரோதத்தில் வெல்டிங் தொழிலாளி சரமரியாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.