பி.ஆர் பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

பி.ஆர் பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு

விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜூக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் கிராம மக்களின் விருப்பத்துக்கு மாறாக கச்சா எண்ணெய் கிணறு அமைக்க மத்திய அரசுக்கு சொந்தமான ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பணிகளை தொடங்கியது. இதனை அறிந்த தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் 22 பேர் சம்பவ இடத்திற்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அங்கிருந்த சில இரும்புப் பொருட்கள் உள்ளிட்டவை சேதப்படுத்தியதாக பி.ஆர். பாண்டியன் மற்றும் விக்கிரபாண்டியம் ஊராட்சி தலைவராக இருந்த செல்வராஜ் உள்ளிட்ட 22 பேர் மீது விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் ஓ.என்.ஜி.சி. நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஓ.என்.ஜி.சி அளித்த புகாரில் சுமார் 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து, 10 ஆண்டுகளுக்குப் பின் கடந்த 6 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 18 பேரை விடுதலை செய்து விட்டு, பி.ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதையடுத்து, ஜாமீனில் இருந்த பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரியும், இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரியும் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட இருவர் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன், விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜிக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்திவைத்து விசாரணையை ஒத்தி வைத்தார்.