100 நாள் வேலை திட்டம் தொடர்பாக நாளை பேரவையில் தீர்மானம் கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் 125 நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த திட்டமே இல்லாமல் போய்விடும் போன்று ஆளுநர் உரையில் உள்ளது என்று பேசினார்.
இதற்கு பதில் அளித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, இந்த திட்டத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுகிறது. அதற்கு நீங்கள் ஆதரவு அளிக்கிறீர்கள். 100 சதவீதம் அளித்த நிதியை 60 சதவீத தான் தருவோம் என்று மாற்றி உள்ளார்கள். காந்தி பெயரை மாற்றி உள்ளார்கள். 125 நாட்கள் கொடுப்போம் என்பது ஏமாற்று வேலை. வேலை நாட்களை மத்திய அரசே நிர்ணயம் செய்யும் என்று கூறுகிறார்கள் என்றார்.
குறுக்கிட்ட எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், 100 நாளை 150 நாட்களாக உயர்த்தப்படும் என அறிவித்த திமுக, தற்போதுவரை அதனை நிறைவேற்றவில்லை. ஆனால் மத்திய அரசு 125 நாட்களாக உயர்த்தியுள்ளது அதனை தான் நாங்கள் வரவேற்றுள்ளோம். பெயரை மாற்றக்கூடாது என நாங்களும் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, தங்கள் ஆட்சிக்காலத்தில் தான் இத்திட்டமே தொடங்கப்பட்டது என்றும், இன்றைய பாஜக அரசு இந்த திட்டத்தை மாற்ற முயற்சிக்கிறது. காந்தி பெயரை மாற்றி ராம்ஜி என பெயர் வைத்தது ஏன் ? ஜி ஜி ராம்ஜிக்கு எல்லாம் இந்தியாவில் வேலை கிடையாது என்றார்.
பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மை. ஆனால் அதனை செய்ய வேண்டியது மத்திய அரசு தானே. மத்தியில் நாங்கள் தான் ஆட்சிக்கு வரவில்லையே எப்படி செய்ய முடியும் ? உங்கள் கூட்டணியில் இருக்கும் பாஜக தான் ஆட்சியில் இருக்கிறது. நீங்கள் குரல் கொடுக்கலாமே என்றார்.
எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நம்பித்தானே வாக்களித்தார்கள். நிறைவேற்ற வேண்டியது உங்களின் கடமை. எந்த அடிப்படையில இந்த வாக்குறுதியை கொடுத்தீங்க. இது தந்திரமான அறிக்கை தானே, என்றார். இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாமி, இந்த திட்டத்தை கொண்டு வரும் போது மத்திய அரசு இயற்றும் போது மத்திய அரசு தான் நூறு சதவிகிதம் மானியம் கொடுத்தது. ஆனால் தற்போது 60-40 ஆக்கிவிட்டார்கள் எதிர்ப்பு தெரிவித்தீர்களா ? என்ற கேள்வி எழுப்பினார்.