“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம்: முதல்வர் தலைமையில் 28-ம் தேதி நடக்கிறது

மாமல்லபுரத்தில், தேர்தலை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு ‘ என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பயிற்சிக் கூட்டம் வரும் அக்.28-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

இதுகுறித்து பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிடலின்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய பாஜக அரசின் முன்பு "தமிழ்நாடு தலைகுனியாது" என்ற பரப்புரையை கழகம் தொடங்கவுள்ளது.

அதன் ஒருபகுதியாக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" என்ற முன்னெடுப்புக்காக ”திமுக மாவட்ட செயலாளர்கள் - மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் - சட்டப்பேரவை உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழக செயலாளர்களுக்கான பயிற்சிக் கூட்டம்” வரும் அக்.28ம் தேதி செவ்வாய்கிழமை, காலை 9 மணிக்கு மாமல்லபுரம், ஈ.சி.ஆர்.சாலையில் உள்ள “கான்ஃப்ளூயன்ஸ் ஹாலில்’’ நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், மாநிலங்களவை, மக்களவை உறுப்பினர்கள், எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்க் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.